இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்: மோடியைச் சந்தித்த பின் சீன அதிபர் பேட்டி

இந்தியா, சீனா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும்; அதற்காக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி.


இந்தியா, சீனா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும்; அதற்காக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர்.
முதல் சந்திப்பு: இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு சீன அதிபரைச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். 
இதேபோல், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பதற்கு போட்டு வந்த  முட்டுக்கட்டையை சீனா கடந்த மாதம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு மோடி- ஜின்பிங் இடையேயான முதல் சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 
பின்னர், இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியா-சீனா இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுக்க வேண்டும்.
இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படுவதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு சீனா தயாராக உள்ளது. இரு நாடுகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பரஸ்பரம் அளிக்க வேண்டும். அவ்வாறின்றி, ஒருவரை ஒருவர் அச்சுறுத்தக் கூடாது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஜின் பிங்கிடம் மோடி சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி- ஜின்பிங் இடையேயான சந்திப்பின்போது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த இந்தியா விரும்பியபோதிலும், அதற்கான முயற்சிகள் தடம் மாறிச் செல்வதாகவும் ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமெனில் பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார் என்று விஜய் கோகலே கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், பிஷ்கெக் நகருக்கு வந்துள்ளார். மாநாட்டின் இடையே ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த நிலையில்தான், பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிபரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டின் இடையே, இம்ரான் கானை மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று ஏற்கெனவே இந்தியா முடிவு செய்துவிட்டது.
நின்றுபோன பேச்சுவார்த்தை: பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப் படைத் தளத்துக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு, அந்நாட்டுடன் அமைதிப்பேச்சுவார்த்தையை இந்தியா தொடரவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாதி கடந்த பிப்ரவரியில் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
அதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது.  இதுபோன்ற தொடர் சம்பவங்களால், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பொறுப்பேற்ற பிறகு, காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இரு முறை அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்து விட்டார். இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்துவதற்கு வன்முறையற்ற, பயங்கரவாதம் இல்லாத சூழலையும், நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டியது அவசியம் என்று இம்ரான் கானிடம் மோடி தெரிவித்திருந்தார்.
புதின் - மோடி பேச்சுவார்த்தை
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு உயரதிகாரிகள் குழுவினர் அப்போது உடனிருந்தனர்.


இந்தியா-ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து,  இரு தலைவர்கள் முன்னிலையில்  உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் 
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com