கேரளத்தில் தொடர் கனமழை: கடலோரப் பகுதிகளில் அதிக சேதம்

தென்மேற்கு பருவமழை நீடித்து வருவதால், கேரளத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் 100-க்கும்


தென்மேற்கு பருவமழை நீடித்து வருவதால், கேரளத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், எர்ணாகுளம், ஆலப்புழை, திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டுள்ளது.
கடல் மட்டம் அதிகரித்து வருவதாலும், மண் அரிப்பு ஏற்பட்டதாலும், வலியதுறையில் மட்டும் சுமார் 15 வீடுகள் முழுவதும் சேதமடைந்தன. அதுதவிர 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பிற பகுதிகளில் சேதமடைந்தன.
மக்கள் போராட்டம்..: இந்நிலையில், கரையோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டுவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்று வலியதுறை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக வலியதுறைக்கு அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் கே. கிருஷ்ணமூர்த்தி சென்றிருந்தார். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தேவையானவற்றை அரசிடம் ஆலோசித்து ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உத்தரவாதம் அளித்தும், அவர் சென்ற வாகனத்தை மறித்து கோஷமிட்டனர். அதையடுத்து காவல் துறையினர், அவர்களை கலைத்து அமைச்சராக பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின்போது, எங்களது வீடுகள், பொருள்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆனால், எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினர்.
நிவாரணம்..: இதனிடையே, மழையினால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில்,  திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 22.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com