மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் பேச்சுவார்த்தை

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி சந்தித்து, இரு கட்சிகளையும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கட்சிகளையும் இணைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கடிதம் அளித்தார்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இருகட்சிகளையும் இணைப்பதன் முக்கியத்துவம் குறித்த கடிதத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவிடம் சீதாராம் யெச்சூரி அளித்துள்ளார். அதுகுறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும், இருகட்சிகளையும் இணைக்கும்படி கட்சித் தொண்டர்கள், தலைமையை வலியுறுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எங்களது இந்த முயற்சி, நிச்சயம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறினார்.
இருகட்சிகளையும் இணைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்து வருவது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகளும் பிரிந்தது குறித்து சில அதிருப்தி கேள்விகளை கட்சியின் ஒரு சாரார் எழுப்புகிறார்கள். இது காரணமாக இருக்கலாம் என்றார்.
1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்தது. ஆனால் அது காலப்போக்கில் பிரிந்திருக்க வேண்டாம் என்று அவர்களையே எண்ண வைத்துவிட்டது.  இதுவரை இருகட்சிகளுக்கும் இடையே பெரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டதில்லை. பல மாநிலங்களில், இரு கட்சிகளும் கூட்டணி வைத்தே தேர்தலைச் சந்திக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில், இது வரை இல்லாத அளவு கம்யூனிஸ்ட் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. மக்களவையில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 3 எம்.பி.க்களும் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தலைமை பதவியில் இருந்து விலகுவதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி முடிவெடுத்துள்ளார். அதனால், இரு கட்சிகளையும் இணைப்பதில் அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com