மேற்கு வங்க வன்முறை: ஆளுநர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் அரசியல் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆளுநர் கே.என்.திரிபாதி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு


மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் அரசியல் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆளுநர் கே.என்.திரிபாதி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் இருந்தே அரசியல் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றன. முக்கியமாக மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும் வன்முறை தொடர்ந்து வருகிறது.  மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 8 பேரும்,  பாஜக ஆதரவாளர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனர். மாநிலத்தில் தொடர்ந்து நிகழும் வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் புதன்கிழமை நடத்திய பேரணியிலும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், மாநிலத்தில் அரசியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆளுநர் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முகமது சலீம் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். எனினும், இக்கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மஜூம்தார், ஆளுநர் சில யோசனைகளை முன்வைத்தார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால், தங்கள் கட்சித் தலைமையுடன் இது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதி தெரிவித்துவிட்டார். மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறைகளுக்கு செயல்திறனற்ற மாநில அரசுதான் காரணம் என்றார்.
மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறைகளுக்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற முகமது சலீம் கூறினார்.
முன்னதாக, பாஜகவின் உத்தரவின் பேரில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளுநர் நடத்துகிறார். எனவே கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று மாநில முதல்வர் மம்தா கூறியிருந்தார். எனினும், கடைசி நேரத்தில் தனது முடிவை அவர் மாற்றிக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com