29 அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி: இந்தியா முடிவு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் "வால்நட்'  உள்ளிட்ட சில பருப்பு வகைகள் என 29 பொருள்களுக்கான இறக்குமதி வரி (ஜூன் 16) முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
29 அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி: இந்தியா முடிவு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் "வால்நட்'  உள்ளிட்ட சில பருப்பு வகைகள் என 29 பொருள்களுக்கான இறக்குமதி வரி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு  ரூ.1,514 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இது தொடர்பான முறைப்படியான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் விரைவில் வெளியிட இருக்கிறது. முன்னதாக, அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் முடிவை இந்தியா பலமுறை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும், 10 சதவீதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட், பருப்பு வகைகள், இரும்பு, உருக்குப் பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. இது ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 

வரிகள் அதிகரிப்பு குறித்து, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, வரி அதிகரிப்பை அமல்படுத்தும் நடவடிக்கை செப்டம்பர் 18, நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளுக்குத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாததால், இந்த நடவடிக்கை மீண்டும் சிலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், தனது முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. மேலும், வரி விதிப்பு விஷயத்தில் இந்தியாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன்படி வால்நட் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 120 சதவீதமாகவும், கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை, மசூர் உள்ளிட்ட  பருப்பு வகைகள் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாகவும், போரிக் அமிலம்,  சில வகை பிளாஸ்டிக் பொருள்கள் மீதான வரி 7.5 சதவீதமாகவும், ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் சோதனைப் பொருள்கள் மீதான வரி 10 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பருப்பு வகைகள், இரும்பு, எஃகு பொருள்கள், ஆப்பிள், அலாய், துருப்பிடிக்காத இரும்பு பொருள்கள், பைப் இணைப்புகள், குழாய்கள், ஸ்க்ரூ, போல்ட், ரிவிட் ஆகியவற்றின் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தகம் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2017-18-இல் 47.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அதே ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து நமது நாடு 26.7 பில்லியன் டாலர் அளவுக்கே இறக்குமதி செய்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே வரி விதிப்பு தொடர்பான மோதல் ஏற்பட்டு, இரு நாடுகளும் ஒன்றன் மீது மற்றொரு நாடு வரிகளை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் வரியை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com