முதலில் மன்னிப்பு: மம்தாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த மருத்துவர்கள்

முதலில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ள மேற்கு வங்க மருத்துவர்கள், மம்தா பானர்ஜியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.
முதலில் மன்னிப்பு: மம்தாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த மருத்துவர்கள்


கொல்கத்தா: முதலில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ள மேற்கு வங்க மருத்துவர்கள், மம்தா பானர்ஜியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.

நில் ரதன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்து மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும் வரை, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தலைமைச் செயலகம் செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்கு வங்கத்தில் சுமார் 500 மூத்த அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து எதிர்ப்பைப் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை 5-ஆவது நாளாக நீடித்துள்ளது. இதன் காரணமாக,  அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதை மீறி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

பிரச்னையின் தொடக்கம்: கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

மூத்த மருத்துவர்கள் பதவி விலகல்: மேற்கு வங்கம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் வியாழக்கிழமை ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தார். அதில், மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். எனினும், இப்பிரச்னைக்கு தீர்வு காண இயலாததைக் குறிப்பிட்டு, என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சைபல் முகர்ஜி, துணை முதல்வர் சௌரவ் சட்டோபாத்யாயா ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட மூத்த அரசு மருத்துவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

இடைக்கால தடை விதிக்க மறுப்பு: இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன், நீதிபதி சுவ்ரா கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மருத்துவர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசே எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நாடு முழுவதும் ஆதரவுப் போரட்டம்:  கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உறைவிட மருத்துவர்கள் 4,500 பேர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதேபோல, உத்தரப் பிரதேசம், ஒடிஸா, கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மருத்துவர்கள் பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

17-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
வரும் 17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி வெள்ளிக்கிழமை கூறுகையில், "கொல்கத்தா மருத்துவமனையில் அண்மையில் தாக்கப்பட்ட இளம் மருத்துவர் பரிபா முகர்ஜி கவலைக்கிடமாக உள்ளார். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தேசிய அளவில் போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கத்தின் 1,700 கிளைகள் சார்பில் 3.5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். இப்போராட்டங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். ஜூன் 17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்' என்றார்.

மம்தா மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல்

இதனிடையே, போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மேற்கு வங்க மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

மேலும், தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்றார்.


வெளியாட்கள் தூண்டுதலே காரணம்

மேற்கு வங்கத்தில் வெளியாட்களின் தூண்டுதல் காரணமாக, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் வெளியாட்கள் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்ச்பாரா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, இதுகுறித்து மேலும் கூறியதாவது:
வெளியாட்கள் மருத்துவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்திலும் அவர்களுக்கு தொடர்பு உள்ளது. எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியாட்கள் சிலர் எனக்கு எதிராக கோஷமிட்டதைப் பார்த்தேன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ததால்தான், மேற்கு வங்கத்தில் பாஜகவால் சில இடங்களில் வெற்றிபெற முடிந்தது. எனவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்.
மாநிலத்தில் வங்காளிகளையும், சிறுபான்மையினரையும் குறிவைத்து பாஜகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். கூலிப்படையினருக்கு எதிராக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள், பேசுவதற்காக வங்க மொழியைக் கற்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com