"வாயு' புயல் அச்சுறுத்தல் நீங்கியது

"வாயு' புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததால் குஜராத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நீங்கி விட்டதாக அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
"வாயு' புயல் அச்சுறுத்தல் நீங்கியது

"வாயு' புயல் மேற்கு நோக்கி நகர்ந்ததால் குஜராத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நீங்கி விட்டதாக அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
காந்திநகரில் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ரூபானி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
குஜராத் தற்போது பாதுகாப்பாக உள்ளது. வாயுப் புயல் மேற்கு நோக்கி நகர்ந்து விட்டதால் புயல் அபாயத்திலிருந்து மீண்டு விட்டோம். 
புயல் எச்சரிக்கையால், கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த 2.75 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 
தற்போது, புயல் அபாயம் நீங்கியதால் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். 
தற்போது, மெல்ல, மெல்ல கரையை கடந்த இந்தப்புயல் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ.க்கு அப்பால் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. 
பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புயல் பேரிடரை கண்காணிப்பதற்காக 10 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பி வைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர். சாலை போக்குவரத்து மற்றும் பேருந்துகளும் வழக்கம்போல இயங்கத் தொடங்கி விட்டன. 
இருப்பினும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மட்டும் கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு தொடர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார் அவர். 
பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு அடுத்து வரும் 3 நாள்களுக்கு உணவு உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 
வியாழக்கிழமை மதியத்துக்கு மேல் வாயு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 114 வட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் புயல் திசை மாறுகிறது?

"வாயு' புயல் மீண்டும் திசை மாறி ஜூன் 17, 18ஆம் தேதிகளில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து, மத்திய வானிலை ஆராய்ச்சி அமைச்சகத்தின் செயலர் எம்.ராஜீவன் கூறியதாவது, "வாயு' புயல் கட்ச் பகுதியில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த புயல் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். இதுதொடர்பாக, குஜராத் அரசும் உஷார்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 
ஆமதாபாத் வானிலை மையத்தின் கூடுதல் இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறுகையில், "வாயு' புயல் கட்ச் கடலோரப் பகுதியை அடுத்த 48 மணி நேரத்துக்குள் தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால், விரைவிலேயே  புயல் வலுவிழந்து கரையை கடந்து விடும் என்று அவர் தெரிவித்தார். 
குஜராத் தலைமைச் செயலர் ஜே.என்.சிங் கூறியதாவது: அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com