மருத்துவர்களுக்கு பாதுகாப்பு; மருத்துவமனைகளில் குறைதீர் மையங்கள்: மம்தா உறுதி

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யவும், மருத்துவமனைகளில் குறைதீர் மையங்கள் அமைக்கவும் மம்தா பானர்ஜி உறுதி அளித்தார். 
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு; மருத்துவமனைகளில் குறைதீர் மையங்கள்: மம்தா உறுதி


போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யவும், மருத்துவமனைகளில் குறைதீர் மையங்கள் அமைக்கவும் மம்தா பானர்ஜி உறுதி அளித்தார். 

மருத்துவர்களை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளநிலை பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் பயனாக போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவசரகாலமாக இருந்தால் மட்டும் நோயாளியுடன் இரண்டு உறவினர்களை உடன் இருக்க அனுமதிப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மருத்துவர்கள் வைத்த முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைதீர் மையம் அமைக்க வேண்டும் என்பதையும் மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு குறைதீர் அலுவலர் நியமிக்கப்படலாம் என்றும், நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள 'பொதுமக்கள் தொடர்புக் குழு' ஒன்றை மருத்துவமனைகளில் அமைக்கவும் ஆலோசனை ஏற்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்றும், அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவர்களை நியமிப்பது குறித்தும் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

முன்னதாக, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். 

மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். அன்றிரவு, அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை கடுமையாகத் தாக்கியது.  இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். 

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து 7-ஆவது நாளாக இன்றும் நீடித்தது. இந்த நிலையில், இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது முதலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூடிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை ஏபிபீ அனந்தா மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com