அரசியல் வேற்றுமையை மறக்கடித்த நீதி ஆயோக்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தின்போது மத்திய அரசின் மீதும், பாஜக மீதும் பல்வேறு கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன.
அரசியல் வேற்றுமையை மறக்கடித்த நீதி ஆயோக்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தின்போது மத்திய அரசின் மீதும், பாஜக மீதும் பல்வேறு கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன. இதற்கு பாஜகவும் தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால் தேசிய அரசியலில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் அமைப்பின் நிர்வாக கவுன்சில் கூட்டம் அரசியல் கட்சிகளிடையே நிலவிய அனைத்து வேற்றுமையையும் மறக்கடித்து விட்டது என்றால் மிகையில்லை.
இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதற்கு அரசியலே காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், நீதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயனும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தனியாகவும் அவர் சந்தித்துப் பேசினார்.
நீதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பினராயி விஜயன் பேசியபோது, தங்களது மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆயுர்வேதா ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை அமைக்கும் விவகாரத்தை எழுப்பினார். கடந்த 4 ஆண்டுகளில் நீதி ஆயோக் அமைப்பு எதிர்பார்த்ததுபோல செயல்படவில்லை, முந்தைய மத்திய திட்டக் குழுவுக்கு நீதி ஆயோக் அமைப்பு சரியான மாற்று கிடையாது என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், கேரளத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் பினராயி விஜயன் அளித்தார். 
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியபோது, தங்களது மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும், பாஜகவின் 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு அளிப்பது குறித்த அளவுகோலை மாற்றியமைக்க வேண்டும் என்றார். மேலும் அவர், " பயிர் பாதிப்பு அளவை 33 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்க வேண்டும். நக்ஸல் தீவிரவாதத்தால் உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சந்தௌலி, சோன்பத்ரா ஆகிய மாவட்டங்களில் இருந்து மத்தியப் பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறக் கூடாது' என்று கேட்டுக் கொண்டார்.
ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேசியபோது, நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆதலால் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் பேசியபோது, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியபோது, ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை காலத்தை 5 ஆண்டுக்கும் மேல் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நீதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பேசிய முதல்வர்களில் பெரும்பாலானோர், விவசாய இடர்பாடுகள், தேசியப் பேரிடர்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளவும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்காகவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com