உ.பி. காங்கிரஸூக்கு புத்துயிரூட்ட பிரியங்கா திட்டம்: 2022 சட்டப் பேரவைத் தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலை குறிவைத்து, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா
உ.பி. காங்கிரஸூக்கு புத்துயிரூட்ட பிரியங்கா திட்டம்: 2022 சட்டப் பேரவைத் தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலை குறிவைத்து, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, உத்தரப் பிரதேசத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளவும், கட்சித் தொண்டர்களை வாரம் இரு முறை சந்தித்துப் பேசவும் அவர் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராக பிரியங்கா கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார். 
இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக தனது தாயார் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி, தனது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி ஆகிய தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ரேபரேலியில் மட்டுமே காங்கிரஸýக்கு வெற்றி கிடைத்தது. காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்டு வந்த அமேதியில் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வந்த ராகுல், இம்முறை தோல்வியைத் தழுவியது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இதனிடையே, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ரேபரேலிக்கு சோனியா அண்மையில் சென்றார். அவருடன்  பிரியங்காவும் சென்றிருந்தார். அப்போது, கட்சித் தொண்டர்களிடையே பேசிய பிரியங்கா, தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபடவில்லை என்ற தனது மனக்குறையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பணிகளில் நேர்மையாகவும் தீவிரமாகவும் ஈடுபடாத கட்சித் தொண்டர்களை அடையாளம் காணப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், உத்தரப் பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை குறிவைத்து, பிரியங்கா வியூகங்களை வகுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
"உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் மோசமான தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வு கூட்டங்களில், கட்சித் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்தொடர்பு இல்லை என்பதை பிரியங்கா கண்டறிந்தார். எனவே, உத்தரப் பிரதேசத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். மேலும், தொண்டர்களை வாரம் இரு முறை சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. 
மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான இடங்கள் கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 
ஆனால், அவரது முடிவை செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. எனினும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com