கருப்புப் பணம்: மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை அளிக்கிறது ஸ்விஸ் அரசு

ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள நிலையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன்
கருப்புப் பணம்: மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை அளிக்கிறது ஸ்விஸ் அரசு

ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள நிலையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இவர்கள், மனை வணிகம், நிதிச் சேவை, தொழில்நுட்பம், தொலைதொடர்பு, ஜவுளி, நகை மற்றும் நவரத்தினங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களாவர். இவற்றில் சில நிறுவனங்கள் போலியானவையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, கடந்த சில வாரங்களில் சுமார் 50 இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. தங்களது வங்கி கணக்கு விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விவரங்களை பகிர நடவடிக்கை: இந்நிலையில், அந்த 50 இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு 
அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களில், கருப்புப் பணம் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பகிர்ந்துகொள்வது நீண்ட கால நடவடிக்கையாகும். கடந்த ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கடந்த சில வாரங்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு முதல்கட்டமாக ஏற்கெனவே ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ததால், அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மேல்முறையீட்டுக்கு இறுதி வாய்ப்பு அளித்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களது புதிய மனுக்களும் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, 50 பேரின் விவரங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஸ்விஸ் அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிக்கைகளில், இந்திய வாடிக்கையாளர்களின் சிலரது பெயர் முழுமையாக இடம் பெற்றிருந்தது. சிலரது பெயர் தலைப்பெழுத்துகளாக மட்டுமே இடம்பெற்றிருந்தன.  கிருஷ்ண பகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினாரிவாலா, ரத்தன் சிங் செüதரி, குல்தீப் சிங் திங்ரா, அனில் பரத்வாஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் முழுமையாக இடம்பெற்றிருந்தன. எனினும், அவர்கள் தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஜியோடெசிக் நிறுவனம் மற்றும் அதன் 3 இயக்குநர்களான பிரசாந்த் சரத் முலேகர், பங்கஜ் குமார் ஓங்கர், கிரண் குல்கர்னி ஆகியோருக்கும், சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்துக்கும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஸ்விட்சர்லாந்து அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது அந்த இரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்தியா மட்டுமல்லாமல், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இதர நாட்டவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கைகளை ஸ்விட்சர்லாந்து அரசு முன்னெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com