கர்நாடகத்தின் 16 ஆறுகளின் தண்ணீர் குளிப்பதற்கும் தகுதியில்லாதது: ஆய்வில் தகவல்

கர்நாடகத்தின் 16 ஆறுகளின் தண்ணீர் குளிப்பதற்கும் தகுதியில்லாதது என்று கர்நாடகம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடகத்தின் 16 ஆறுகளின் தண்ணீர் குளிப்பதற்கும் தகுதியில்லாதது: ஆய்வில் தகவல்

கர்நாடகத்தின் 16 ஆறுகளின் தண்ணீர் குளிப்பதற்கும் தகுதியில்லாதது என்று கர்நாடகம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கர்நாடகத்தில் உள்ள ஆறுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது.  அதன்படி,  அர்க்காவதி, லட்சுமண்தீர்த்தா, மலபிரபா, துங்கபத்ரா,  பத்ரா, காவிரி, கபினி, காகினா, காளி,  கிருஷ்ணா (இரண்டு இடங்கள்),  சிம்சா,  பீமா,  குமாரதாரா,  நேத்ராவதி, துங்கா, யகச்சி ஆகிய 16 ஆறுகளின் பாய்ந்தோடும் தண்ணீரின் தரத்தை வாரியம் ஆய்வு செய்துள்ளது.  தண்ணீர் தரத்தின் அடிப்படையில் ஆறுகளின் தண்ணீரை "ஏ',  "பி',  "சி',  "டி' என்று வகைப்படுத்தியுள்ளது. இதில் குமாரதாரா, நேத்ராவதி ஆறுகள் மட்டும் "பி'  தரத்தைப் பெற்றுள்ளன. பிற ஆறுகள் அனைத்தும் "சி',  "டி'  தரம் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ' சி' வகை தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்த இயலாது. அவற்றில் உள்ள கிருமிகளை அகற்றிவிட்டுத்தான் குடிநீராகப் பயன்படுத்த முடியும். ஆனால், "டி'வகைப்படுத்தப்பட்டுள்ள தண்ணீர் விலங்குகள், மீன்கள் பருகுவதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது,  மனிதர்கள் குடிக்கத் தகுதியில்லாதது மட்டுமல்ல,  குளிப்பதற்கும் தகுதியில்லாததாகும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. 

2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நேத்ராவதி ஆற்றின் தண்ணீர் தரம் மட்டும் மாறாமல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஆய்வு செய்த ஆறுகளில் மிகவும் மோசமானது என்று அர்க்காவதி, பத்ரா ஆறுகளின் தண்ணீரை வாரியம் குறிப்பிட்டுள்ளது.  2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான ஆறுகளின் தண்ணீர் தரம் "சி' மற்றும்  "டி' வகைப்பட்டதாக இருந்துள்ளது. காவிரி, கபினி, காளி, யகச்சி ஆறுகளின் தண்ணீர் "சி' வகைப்படுத்தப்பட்டுள்ளது.  சிம்சா ஆற்றின் நீரை மத்தூர் நகரப் பகுதியில் சோதித்தபோது அது "இ' வகைக்குச் சென்றது தெரியவந்துள்ளது.  அதாவது, இந்த நீரை விவசாயப் பாசனத்திற்கும்,  தொழிலக குளிர்சாதனங்களுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட தண்ணீர் வெளியேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தகுதி வாய்ந்ததாகும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.  வாரியத்தின் ஆய்வறிக்கையின்படி, கர்நாடகத்தில் உள்ள காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட எந்த ஆற்றின் தண்ணீரும் மனிதர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் தரத்தில் இல்லை என்று கூறியுள்ளது. 

இது குறித்து வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர் மனோஜ்குமார் கூறுகையில்,"  ஆறுகளின் தண்ணீர் பழுப்பு நிறமாகவும், சில நேரங்களில் கருப்பு நிறத்திற்கும் மாறியுள்ளன. இதற்கு மண் அரிப்பு மற்றும் மாசுபடுதலே முக்கிய காரணமாகும்.  ஆற்றுநீர் குளிப்பதற்கும் தகுதியில்லாமல் போனது கவலை அளிக்கிறது.  தண்ணீரின் தரத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுசெய்து வருகிறோம்.  தண்ணீரின் தரம் நாளுக்கு நாள் தரமிழந்து வருகிறது.  தண்ணீரில் கரைசலாக இருக்கும் ஆக்சிஜன்,  உயிரிவேதி ஆக்சிஜன், கழிவுப் பொருள் நுண்கிருமிகள், மொத்த நுண்கிருமிகளை ஆய்வு செய்வோம்.  மனிதர்கள் குடிப்பதற்கு தகுதியான தண்ணீரை 'ஏ' என்று வகைப்படுத்துகிறோம்.  அப்படி எந்த ஆற்றின் நீரும் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com