பிகார்: ரத்தத்தில் தாழ்சர்க்கரை நிலையால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 83-ஆக உயர்வு

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் ரத்தத்தில் தாழ் சர்க்கரை நிலையால் (ஹைபோகிளைசீமியா) பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வீதம்
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள மருத்துவமனையில் தாழ் சர்க்கரை நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள மருத்துவமனையில் தாழ் சர்க்கரை நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள்.

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் ரத்தத்தில் தாழ் சர்க்கரை நிலையால் (ஹைபோகிளைசீமியா) பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் கருணைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக முதல்வரின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முசாஃபர்பூர் மாவட்டம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோய்க்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் வீதம் கருணைத்தொகை வழங்கப்படும். 
அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மருத்துவர்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏஈஎஸ் எனப்படும் திடீர் மூளைத்திசு அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைவில் குணமடைய  வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முசாஃபர்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் மாவட்டத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 83-ஆக உள்ளது. இதில் 14 குழந்தைகள் திடீர் மூளைத்திசு சுழற்சி பாதிப்பால் இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
அதேசமயம், இறந்த பெரும்பாலான 10 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் ரத்தத்தில் தாழ் சர்க்கரை நிலை காரணமாக இறந்துள்ளனர். 
ஜூன் 1ஆம் தேதியில் இருந்து இதுவரை 197 குழந்தைகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 91 குழந்தைகள் திடீர் மூளைத்திசு அழற்சியால் பாதிக்கப்பட்டதாக கூறி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முசாஃபர்பூருக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். அவருடன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேயும் உடன் சென்றார். இதனிடையே, முசாஃபர்பூரில் நிலைமையை ஆய்வு செய்ய மத்தியக்குழு புதன்கிழமை வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com