மக்களவை இன்று கூடுகிறது: புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற  விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்க
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற  விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்க

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும். மக்களவைக்கு புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு செய்யப்பட 
இருக்கிறார்.

மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது.
இதையடுத்து 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி.யான வீரேந்திர குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். பின்னர், புதிய எம்.பி.க்களுக்கு வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

இதில் முதல் 2 நாள்கள், அதாவது 17,18-ஆம் தேதிகளில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 542 பேரும் பதவியேற்கவுள்ளனர். 19-ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இதன்பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 20-ஆம் தேதி உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜூலை 5-இல் பட்ஜெட் தாக்கல்: இதையடுத்து மக்களவையில் ஜூலை 5-ஆம் தேதியன்று பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்தபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். ஆதலால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

மக்களவைத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு தலைமை வகிக்கப் போவது யார் என்று இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களிடையே குழப்பம் நிலவுகிறது.

கடந்தகால கூட்டத் தொடர்களில் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவெ கௌடா எம்.பி.யாக பதவி வகித்தார். இம்முறை அவர் எம்.பி.யாக இல்லை. பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி ஆகியோரும் எம்.பி.க்களாக இல்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு முன்னாள் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் எம்.பி.க்களாக இல்லை.

இக்கூட்டத் தொடரில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிப்பது தொடர்பான மசோதா , வங்கியில் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கு விருப்ப அடிப்படையில் ஆதாரை ஆவணமாக அளிக்க வகை செய்யும் ஆதார் மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்த மசோதா, ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்   

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்கு தில்லியில் அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, ஊடக சுதந்திரம், வறட்சி ஆகிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களின் குழுத் தலைவர் குலாம் நபி ஆஸாத் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஒபிரையன், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு குலாம் நபி ஆஸாத் பேட்டியளிக்கையில், "மக்கள் நலனுக்கு ஆதரவான மசோதாக்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்தும்போது, சட்டப் பேரவைத் தேர்தலை மட்டும் ஏன் நடத்த முடியாது? இதிலிருந்து ஆளுநர் கட்டுப்பாட்டில் அந்த மாநிலத்தை தொடர்ந்து வைத்திருக்க மத்திய அரசு விரும்புவது தெளிவாகிறது' என்றார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு: கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் வரும் 19-ஆம் தேதி மத்திய அரசுடன் ஆலோசனை நடத்த வருமாறு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்' என்றார்.

இதையடுத்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், "அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நல்லமுறையில் நடைபெற்றது. மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கிய தலைவர்களுக்கு எனது நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com