அமெரிக்காவில் யோகா பிரபலமடைந்துள்ளது: ஹர்ஷ் வர்தன் ஸ்ருங்லா

அமெரிக்காவில் யோகாசனப் பயிற்சி மிகவும் பிரபலமடைந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் யோகா பிரபலமடைந்துள்ளது: ஹர்ஷ் வர்தன் ஸ்ருங்லா


அமெரிக்காவில் யோகாசனப் பயிற்சி மிகவும் பிரபலமடைந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தாண்டுக்கான யோகா தினத்தைக் கொண்டாட பல்வேறு நாடுகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இந்தியத் தூதரகம் சார்பில் யோகாசனப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ருங்லா கூறியதாவது:
உலக மக்களுக்கு இந்தியக் கலாசாரம் அளித்துள்ள கொடையே யோகாசனம். மனத்தையும், உடலையும் ஒருங்கிணைக்கும் கருவியாக இது திகழ்கிறது. மேலும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் உலக மக்களிடையே இது பரப்பி வருகிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதையும் யோகாசனம் ஊக்குவிக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் யோகாசனப் பயிற்சிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் யோகாசனப் பயிற்சி மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதன் மூலம் யோகாசனத்துக்கு அமெரிக்க மக்கள் அளித்து வரும் மதிப்பு தெளிவாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியத் தூதரகம் சார்பில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சி வகுப்பில், வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும், அமெரிக்க அமைச்சக அதிகாரிகளும், நேபாளம், மியான்மர், மோரீஷஸ் ஆகிய நாடுகளின் தூதர்களும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com