இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு முன்னேற்றம் கண்டுள்ளது: அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர்

பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை அண்மைக் காலத்தில் வலுப்படுத்தியதன் மூலம் இந்தியா-அமெரிக்கா
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு முன்னேற்றம் கண்டுள்ளது: அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர்


பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை அண்மைக் காலத்தில் வலுப்படுத்தியதன் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கென்னத் ஜஸ்டர் கூறியதாவது:
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி  நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறிப்பிட்டதைப் போல, இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நிலவி வரும் நல்லுறவு, இயற்கையாக அமைந்தது. இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பைப் போன்று, உலகிலுள்ள வேறு எந்த இரு நாடுகளுக்குமிடையே காணப்படவில்லை.
இந்தியாவுக்கான எரிசக்தி தேவையை அமெரிக்கா தொடர்ந்து கருத்தில்கொண்டு வருகிறது. எரிசக்தி விவகாரத்தில், அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. முக்கியமாக டெக்சாஸ் மாகாணம் இந்திய நிறுவனங்களால் அதீத பலனடைந்து வருகிறது.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், விப்ரோ, இன்ஃபோசிஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுகள் வேலைவாய்ப்பை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பு அண்மைக் காலமாக வலுப்பட்டுள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவு முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த நல்லுறவு வருங்காலத்தில் மேலும் வலுப்படும்.
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, ராணுவத்தை நவீனப்படுத்துவது ஆகிய முக்கிய பிரச்னைகளை அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்டுள்ளது. சீனாவில் வர்த்தகம் புரிவது கடினமாக இருப்பதாக அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அமெரிக்காவுடனான தனது வர்த்தகத்தை இந்தியா அதிகரித்துக் கொள்ளலாம். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com