தேசிய வணிகர்கள் நல வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும்: சிஏஐடி வலியுறுத்தல்

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தேசிய வணிகர்கள் நல வாரியத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது.


தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தேசிய வணிகர்கள் நல வாரியத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து இந்த அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் பிரவீண் கண்டேல்வால் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நாட்டில் பெருநிறுவனத் துறையைச் சாராத சுமார் 7 கோடி சிறு வணிகர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு எந்த அரசும் வணிக சமுதாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலின் போது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வர்த்தக சமுதாயம் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து ஆதரவு அளித்தது. இதனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வணிக சமுதாயத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் விவகாரங்களை கையாளும் என்பது வெளிப்படை. அதன்படி, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடியும், பிரதமர் மோடியின் அறிவிப்புப்படியும் அரசு விரைவில் சில்லறைக்கான தேசிய வர்த்தகக் கொள்கையை வெளியிடும்.
மேலும், உடனடியாக உரிய அதிககாரங்களுடன் கூடிய தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த அமைப்பு அரசுக்கும், வர்த்தகர்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்படும். அதேபோன்று, ஜிஎஸ்டியை முறைப்படுத்துவதும், எளிமைப்படுத்துவதும் முக்கிய விவகாரமாகும். ஜிஎஸ்டியின் கீழ் கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், சாதாரண வணிகர்கள் இந்த விஷயத்தைப் பின்பற்றி செயல்பட முடியும். மேலும், வரிக் கணக்கு விவரங்களை மாதம்தோறும் தாக்கல் செய்வதற்குப் பதிலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யும் முறை இருக்க வேண்டும்.
ஜிஎஸ்டியின் கீழ் உள்ள வெவ்வேறு வரி அடுக்குகளை மீளாய்வு செய்ய வேண்டும். மூலப் பொருள்கள் மீதான வரி விகிதம், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீதான வரி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது. ஆட்டோ உதிரிபாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் மற்றும் சிமெண்ட், மார்பிள், பெயிண்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் 28 சதவீத வரிக்குள் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீட்டு வசதியை ஊக்குவிக்கும் வகையில் வரியைக் குறைக்க வேண்டும். மாவட்ட அளவில் ஜிஎஸ்டி குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் வர்த்தகர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். வர்த்தகர்கள், நுகர்வோர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
கடுமையான நடைமுறைகள் காரணமாக வங்கிகளில் இருந்து வணிகர்கள் எளிதாகக் கடன் பெற முடிவதில்லை. எனவே, முத்ரா திட்டத்தை மேலும் திறன்மிக்க வகையில் செயல்படுத்த வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து சிறுவணிகர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கடன் பெற முடிகிறது. மற்ற வர்த்தகர்கள் தனியார் வட்டிக் கடைக்காரர்களையும், இதர முறைசாரா ஆதாரங்களையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையுள்ளது.
அனைத்து அரசுத் துறைகளும் தற்போது இணையதளத்தில் இயங்குவதற்கு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளன. ஆனால், 35 சதவீத சிறு வணிகங்கள் மட்டுமே இதுவரை கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதை மேம்படுத்துவது அவசியமாகிறது. எனவே, கணினிகள் மற்றும் அது சார்ந்த கருவிகள் வாங்குவதற்கு வர்த்தகர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் அளிக்க வேண்டும். எஞ்சியுள்ள 50 சதவீதம் தொகையை எளிய தவணை முறையில் வங்கிகள் நிதி அளிக்க முடியும். மேலும், வணிகத்தை நடத்துவதற்கு பல உரிமங்கள் முறைக்குப் பதிலாக ஓர் உரிமம் முறை அமல்படுத்தப்பட வேண்டும். வருடந்தோறும் உரிமம் புதுப்பிக்கும் நடைமுறையும் ரத்து செய்யப்பட வேண்டும். வணிகத்தின் தன்மை அல்லது நிறுவனம் மாற்றப்பட்டால் மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டு வரவேண்டும்.
பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போலவும், தேர்தலின் போது பிரதமர் மோடி அறிவித்தது போலவும் வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அதே போன்று, கிஷான் கடன் அட்டை மாதிரி வியாபாரி கடன் அட்டையும் வழங்கப்பட வேண்டும். அரசு வாரியங்கள், குழுக்கள் மற்றும் பல்வேறு அமைச்சங்களில் உள்ள வெவ்வேறு குழுக்களில் வர்த்தகர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் சுமார் 7 கோடி வர்த்தகர்கள், சுமார் 30 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றனர். மேலும், வர்த்தகர்கள்ஆண்டுக்கு ரூ.45 லட்சம் கோடி விற்றுமுதல் உருவாக்கி வருகின்றனர் என்று பிரவீண் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com