மோடி, ராகுல் எம்.பி.க்களாக பதவியேற்பு

பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
மோடி, ராகுல் எம்.பி.க்களாக பதவியேற்பு


பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எம்.பி.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 
இக்கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
இதைத் தொடர்ந்து, 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் முறைப்படி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. புதிய அவை கூடும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, உறுப்பினர்கள் அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாக எழுந்து நின்றனர்.
எம்.பி.யாக பதவியேற்றார் மோடி: பின்னர், புதிய எம்.பி.க்களுக்கு மக்களவை இடைக்காலத் தலைவர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக பதவியேற்க பிரதமர் மோடியை மக்களவை தலைமைச் செயலர் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா அழைத்தபோது, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் மேஜையை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மோடி, மோடி என்றும், பாரத் மாதா கீ ஜே என்றும் அவர்கள் கோஷமிட்டனர். மோடியைத் தொடர்ந்து, அவைக்கு தலைமை வகிக்கும் குழுவில் உள்ள கே.சுரேஷ், பிரிஜ்பூஷண் சரண் சிங், பி.மேதாப் ஆகியோர் பதவியேற்றனர். 
பிராந்திய மொழிகளில்..: பிரதமர் மோடி மற்றும் பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் ஹிந்தி மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். அதேசமயம், ஹர்ஷ்வர்தன், ஸ்ரீபாத் நாயக், அஸ்வினி சௌபே, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் சம்ஸ்கிருதத்தில் பதவியேற்றனர். சதானந்த கௌடா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் கன்னட மொழியிலும், ஹர்சிம்ரத் கௌர் பாதல் பஞ்சாபி மொழியிலும் பதவியேற்றனர்.
இதர மத்திய அமைச்சர்களான அரவிந்த் கண்பத் சாவந்த், ராவ் சாஹிப் தான்வே ஆகியோர் மராத்தியிலும், ஜிதேந்திர சிங் - டோக்ரி, ராமேஸ்வர் தேலி-அஸ்ஸாமி மொழியிலும் பதவியேற்றனர். பிஜு ஜனதா தளம் எம்.பி. மேதாப் ஒடிய மொழியில் பதவியேற்றார். ஆந்திரத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தெலுங்கு மொழியிலும், அஸ்ஸாமைச் சேர்ந்த உறுப்பினர்கள் அஸ்ஸாமி மொழியிலும் பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதவியேற்றபோது, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக எம்.பி.க்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
19-இல் மக்களவைத் தலைவர் தேர்வு: ஆந்திரம், அஸ்ஸாம், பிகார், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். மீதமுள்ள எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளனர். 19-ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். அத்துடன், மக்களவை இடைக்கால தலைவரின் பணி நிறைவடையும். 20-ஆம் தேதி நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஜூலை 5-இல் பட்ஜெட்: மக்களவையில் ஜூலை 5-ஆம் தேதியன்று பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத் தொடரில், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிப்பது தொடர்பான மசோதா, வங்கியில் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கு விருப்ப அடிப்படையில் ஆதாரை ஆவணமாக அளிக்க வகை செய்யும் ஆதார் மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்த மசோதா, ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது.

எதிர்க்கட்சிகளை மதிப்போம்: பிரதமர் 
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளை மதித்து, அவற்றின் எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக, தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான வளர்ச்சி என்பதை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாரக மந்திரமாகக் கடைப்பிடித்தது; அதன் காரணமாகவே மக்கள் மீண்டும் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை, பல்வேறு விஷயங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அதிக அளவிலான பெண்கள் தற்போதைய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய எம்.பி.க்களுடன் பணியாற்ற இருப்பது, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது, கட்சி குறித்தோ, எதிர்க்கட்சி குறித்தோ எம்.பி.க்கள் சிந்திக்கக் கூடாது. நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலும், மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலுமே எம்.பி.க்கள் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சிகளின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எதிர்க்கட்சிகள் சார்பிலான எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுடைய ஒவ்வொரு கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குத் தகுந்த மதிப்பளிக்கப்படும். எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளித்து செயல்படுவோம். மழைக் காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சிறந்த முறையில் பங்கேற்கும் என நம்புகிறேன். இந்தக் கூட்டத்தொடர் நிச்சயம் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய இன்னிங்ஸ்: ராகுல்
கேரள மாநிலம், வயநாடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 17-ஆவது மக்களவையின் உறுப்பினராக திங்கள்கிழமை பதவியேற்றார். ஆங்கிலத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, சுட்டுரையில் ராகுல் வெளியிட்ட பதிவில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியின் பிரதிநிதியாக, நாடாளுமன்றத்தில் எனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன். அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கை மற்றும் உண்மையான பற்றுதலுடன் தொடர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 4-ஆவது முறையாக தனது பணி தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய, சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவையில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோ ஆங்கிலத்திலும், தேவஸ்ஸ்ரீ சௌதரி வங்க மொழியிலும் பதவியேற்றனர். இவர்கள் பதவியேற்கும்போது, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என்று உரக்க கோஷமிட்டனர்.
மேற்கு வங்கத்தில் அண்மையில்  முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனம் கடந்து சென்றபோது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை முன்வைத்து, 
மம்தாவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com