
சத்தீஸ்கரில் தாம்தாரி மாவட்டத்தில் பெண் நக்ஸலைட் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறை துணை ஐ.ஜி. (நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கை) சுந்தர்ராஜ் கூறியதாவது:
தாம்தாரி மாவட்டத்தின் கட்டி கிராமத்திலுள்ள வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்ஸல்களுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பின்னர், அந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் நக்ஸலைட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நவீன ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
பெண் நக்ஸலைட்டை அடையாளம் காண்பதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் சிறப்பு அதிரடி படையினர் ஈடுபட்டனர் என்றார் அவர்.