100 நாள் செயல் திட்டம்: மத்திய செயலர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை

மத்திய அரசின் 100 நாள்  செயல் திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சக செயலர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின்
100 நாள் செயல் திட்டம்: மத்திய செயலர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை


மத்திய அரசின் 100 நாள்  செயல் திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சக செயலர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சகத்தைச் சேர்ந்த 5 செயலர்கள், பிற அமைச்சகங்களின் செயலர்கள், நீதி ஆயோக் அமைப்பின் உயரதிகாரிகள் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கு முடிவு காண்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் 100 நாள் செயல் திட்டத்தை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாட்டின்  பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்தும் இலக்கை அடைவது தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதேபோல், பிரதமர் மோடியால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் திட்டம், பிரதம மந்திரி கிஷாண் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அனைவருக்கும் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை செய்வது குறித்த திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதமாக குறைந்தது. இதை அதிகரிக்க சீர்திருத்த நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 5-ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அதுதொடர்பாகவும் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com