கர்நாடகம்: கடன் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய சட்டம்

கடன் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகம்: கடன் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய சட்டம்


கடன் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
மண்டியா மாவட்டம்,  கே.ஆர்.பேட்டை வட்டம்,  அகலியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் கடன் சுமையால் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.  செவ்வாய்க்கிழமை அக் கிராமத்துக்குச் சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினரைச் சந்தித்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 
பின்னர்,  செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியது:  கர்நாடகத்தில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வாகாது. எனவே, விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்.
கிராம மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளவும் கிராம தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.  கிராம தரிசன நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா கேலி செய்துள்ளார். 
அண்மையில் வறட்சி குறித்து ஆய்வு செய்த எடியூரப்பா, ஆட்சியர்கள், அதிகாரிகளிடம் அரசின் பணிகளைப் பாரட்டியுள்ளார். ஆனால், மேடைகளில் அரசைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. 
மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டையில் ரூ. 213 கோடியில் 50-க்கும் அதிகமான ஏரிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அண்டை மாநிலங்களில் ஆறுகளில் உற்பத்தியாகும் தண்ணீரை அந்த மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால், கர்நாடகத்தில்தான் காவிரி உள்ளிட்ட ஆற்று நீரைப் பயன்படுத்திக் கொள்ள ஆணையத்தின் உதவியை நாட வேண்டியுள்ளது. 
 மகாராஷ்டிர மாநிலத்தில் மழைநீரைச் சேகரித்து விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தும் நடைமுறை குறித்து அறிந்து வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் கடன் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். குறிப்பாக,  தனியாரிடமிருந்து வாங்கும் கடனில் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com