பிரதமர் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பில்லை: மம்தா பானர்ஜி

ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் புதன்கிழமை (ஜூன் 19) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க
பிரதமர் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பில்லை: மம்தா பானர்ஜி


ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் புதன்கிழமை (ஜூன் 19) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே தேர்தல், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 19) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முக்கிய விவகாரம் குறித்து குறுகிய காலத்தில் ஆலோசனை நடத்துவதால், அந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இதுகுறித்து அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, அதை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, ஆலோசனைகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இதுபோல் செயல்பட்டால், முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்கும். 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் குறித்து அனைத்துக் கட்சிகளும் எந்த முடிவுக்கு வந்தாலும், அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்  எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற நீதி ஆயோக் அமைப்பின்  நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தை மம்தா புறக்கணித்தார். இதேபோல், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com