மக்களவைத் தலைவராகிறார் ஓம் பிர்லா

மக்களவைத் தலைவர் பதவிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா (57) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு, தில்லியிலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கி மகிழ்ந்த குடும்பத்தினர்.
மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு, தில்லியிலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கி மகிழ்ந்த குடும்பத்தினர்.


மக்களவைத் தலைவர் பதவிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா (57) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், ஓம் பிர்லா புதிய மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
பதினேழாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. 
மக்களவை இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், மக்களவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற உள்ளது. 
இத்தேர்தலுக்காக, ராஜஸ்தானின் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லாவை வேட்பாளராகப் பரிந்துரை செய்து, மக்களவை செயலரிடம் பாஜக செவ்வாய்க்கிழமை கடிதம் வழங்கியது.
ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக 3 முறை இருந்துள்ள ஓம் பிர்லா, கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
அதிமுக, சிவசேனை உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் ஓம் பிர்லாவின் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 
இதுதவிர, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 
ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடியே பரிந்துரை செய்ததாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு ஓம் பிர்லா நெருக்கமானவர் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், தற்போது ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
பொய்த்த எதிர்பார்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவை கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது. 
அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலோருக்கு, புதிய அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்கப்பட்டது.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் மேனகா காந்திக்கு புதிய அமைச்சரவையில் பொறுப்பேதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மேனகா காந்தி மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும்படி, இரண்டு முறை எம்.பி.யான ஓம் பிர்லா மக்களவைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆதரவு
மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 
இது தொடர்பாக, தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரிந்துரைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது. 
ஓம் பிர்லாவின் பரிந்துரைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முழு ஆதரவளிக்கும் என்றார். 
எனினும், மக்களவைத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து செளதரி எதுவும் தெரிவிக்கவில்லை.
வழக்கத்துக்கு மாறாக...
பொதுவாக, மக்களவைக்கு அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களவை அலுவல்களில் அனுபவம் வாய்ந்த எம்.பி.யையே தலைவர் பதவிக்குப் பரிந்துரை செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த 1996-ஆம் ஆண்டு இரண்டு முறை எம்.பி.யான ஜி.எம்.சி. பாலயோகி, மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஹெலிகாப்டர் விபத்தில் அவர் பலியானதையடுத்து, கடந்த 2002-ஆம் ஆண்டு, முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகர் ஜோஷி மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 
அதேபோல் தற்போதும், இரண்டு முறை எம்.பி.யான ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவர் பதவிக்கு பாஜக பரிந்துரைத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் 8 முறை எம்.பி.யான சுமித்ரா மகாஜன் மக்களவைத் தலைவராக இருந்தார். 
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com