குஜராத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் காலியான இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவதை எதிர்த்து
குஜராத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


குஜராத்தில் காலியான இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது வரும் 24-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், அக்கட்சியின் தலைவர் ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர். அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியானது. இந்நிலையில், காலியான இடங்களைத் தனித்தனி இடங்களாகக் கருத்தில்கொண்டு, அவற்றுக்கான இடைத்தேர்தலும் தனித்தனியாகவே நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு எதிராக, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ்பாய் தானாணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், நியாயமற்றதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்தினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். 
ஆளுங்கட்சிக்கு சாதகம்: காலியாகும் இடங்களுக்கான தேர்தல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என அரசமைப்புச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், தனித்தனியாகத் தேர்தல் நடத்தினால், அது மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு சாதகமாகவே அமையும். எதிர்க்கட்சிகளுக்கு எந்தவொரு பலனும் கிடைக்காது.
தேர்தல் ஆணையத்துக்கு சுதந்திரம் வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி, இவ்வாறான அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அனைவருக்குமான சமஉரிமையை (பிரிவு 14) பாதிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.
ஆராய வேண்டியுள்ளது: இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. 
அப்போது, இந்த மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், முதலில் காலியான இடங்களின் தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதைப் பொருத்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைக் கருத்தில்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com