ஜனநாயக சக்திகளைக் காக்க நீதித்துறை துணை நிற்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

ஜனநாயக சக்திகள், அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் ஆகியவற்றைக் காக்க நீதித்துறை துணை நிற்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சக்திகளைக் காக்க நீதித்துறை துணை நிற்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்


ஜனநாயக சக்திகள், அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் ஆகியவற்றைக் காக்க நீதித்துறை துணை நிற்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) நாடுகளுடைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டம், ரஷியாவின் சோச்சி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியதாவது:
உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், உச்சநீதிமன்ற அமைப்பு மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட சில சமயங்களில் அவர்களின் கடமைகளைச் செய்ய மறந்து, அரசமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சமயங்களில், அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளைக் காக்க, நீதித்துறை துணைநிற்க வேண்டும்.
அதேபோல் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதும் பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அரசியல்நிலைமை எவ்வாறு இருந்தாலும், நீதித்துறை சுதந்திரத்துடன் செயல்படவே மக்கள் விரும்புவர். சுதந்திரத்துடன் செயல்படுவதன் காரணமாகவே, நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தச் சுதந்திரத்துக்கு ஆபத்து நேர்ந்தால், மக்களின் நம்பிக்கை பாழாகி, நாட்டில் நீதியை நிலைநாட்டுவதும் பாதிக்கப்படும்.
சோதனை அவசியம்: நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவில் கொண்டால் மட்டும் போதாது; உண்மையாக நீதித்துறை சுதந்திரத்துடன் செயல்படுகிறதா என்பதை அன்றாடம் சோதனை செய்துகொள்ள வேண்டும். அந்தச் சுதந்திரத்துக்கு ஆபத்து விளைவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் நீதிபதிகளின் சுதந்திரத்துக்குமிடையே குறிப்பிட்ட வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. நீதிபதிகளுக்குத் தகுந்த சுதந்திரம் அளிக்கப்படவில்லை எனில், நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. அரசியல் தலையீடு இல்லா நீதிபதிகள் நியமனம், நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம், பதவிநீக்கம் செய்ய கடுமையான வழிமுறைகள், களங்கம் ஏற்படுத்த முடியாத நிலை உள்ளிட்ட நடைமுறைகளால் மட்டுமே நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும்.
அதே வேளையில், பாகுபாடின்றி நேர்மையுடன் செயல்படாத நீதித்துறை, மக்களின் நம்பிக்கையை இழக்கும்; அத்துடன் நீதித்துறை மீதான உயர்ந்த மரியாதையையும் இழக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com