
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்ப்பது குறித்து அந்தக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று சீனா கூறியுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி-யில் சேர்ப்பது இல்லை என்ற கொள்கை இப்போதும் நடைமுறையில் உள்ளது. அது தொடர்பாக சிறப்புத் திட்டம் ஏதும் வகுக்காமல் இந்தியாவுடன் விவாதிக்க முடியாது என்று சீன தரப்பு கூறியுள்ளது.
சர்வதேச அணுசக்தி விநியோகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள 48 உறுப்பினர்களைக் கொண்ட என்எஸ்ஜியில் இணைய கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதில் 48 நாடுகளும் ஆதரித்தால் மட்டுமே உறுப்பினராக முடியும். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டால் மட்டுமே இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதை பரிசீலிக்க முடியும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது.
இந்நிலையில், என்எஸ்ஜி உறுப்பு நாடுகளின் கூட்டம் கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் கடந்த இரு நாள்கள் (ஜூன் 20,21-ஆம் தேதி) நடைபெற்றது. இதில், இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பெய்ஜிங்கில் வெல்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லு காங் கூறியதாவது:
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி-யில் சேர்ப்பது குறித்து எவ்வித சிறப்புத் திட்டமும் இதுவரை இல்லை. எனவே, என்எஸ்ஜி உறுப்பு நாடுகள் கூட்டத்தின்போது புதிய உறுப்பினராக இந்தியாவைச் சேர்ப்பது குறித்து விவாதம் ஏதும் நடைபெறவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு சீனா எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை. என்எஸ்ஜி-யில் உறுப்பினராவதற்கான விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், எந்த இடத்திலும் விதிகளை மதித்து செயல்படும் நாடு சீனா. அதேபோல மற்ற நாடுகளும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாட்டை உறுப்பினராக்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சீனாவுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்றார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட வைப்பது குறித்து பேச்சுவார்த்தை எதையும் சீனா நடத்துமா? என்ற கேள்விக்கு, இதற்கு என்னிடம் பதில் இல்லை. அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் உறுப்பினராக வேண்டும் என்றால், அதற்குரிய விதிகளை இந்தியாதான் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவுடனான மற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து அது தொடர்பான அமைச்சகங்கள் முடிவுகளை எடுத்து வருகின்றன என்றார்.