
மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சட்டப் பேரவையில் வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான்.
பிகாரில் மாநிலங்களை இடத்துக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
வெள்ளிக்கிழமை அவர் வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தபோது, அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார், மத்திய உள்துறை இணை அமைச்சரும், பிகார் பாஜக தலைவருமான நித்யானந்த் ராய் ஆகியோர் இருந்தனர்.
தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பாட்னா வந்த பாஸ்வான், நேரடியாக கட்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்து வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு திரண்டிருந்தனர். முதல்வர் நிதீஷ் குமார் பொறுமை இழந்து, அமைதி காக்குமாறு செய்தியாளர்களை அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, பாதுகாவலர்கள் செய்தியாளர்களை வெளியேற்றினர்.
பாஸ்வான், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தனது தொகுதியை சகோதரர் பசுபதி குமார் பராஸுக்காக விட்டுக் கொடுத்தார். அவரும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வரும் 25ஆம் தேதி கடைசி தேதி ஆகும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி வரும் 28 ஆகும். வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.