பிகார் மர்மம்: லிச்சிப் பழம் சாப்பிடும் பணக்கார குழந்தைகளை மூளை அழற்சி தாக்காதது ஏன்?

பிகாரில் மூளை அழற்சி நோயால் 120 குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் லிச்சிப் பழம் என்று சொன்னாலும், முக்கியக் காரணங்களாக இருப்பது வறுமையும், பாராமுகம் காட்டும் மாநில அரசுமே என்கிறது உண்மை நிலவரம்.
பிகார் மர்மம்: லிச்சிப் பழம் சாப்பிடும் பணக்கார குழந்தைகளை மூளை அழற்சி தாக்காதது ஏன்?


பிகாரில் மூளை அழற்சி நோயால் 120 குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் லிச்சிப் பழம் என்று சொன்னாலும், முக்கியக் காரணங்களாக இருப்பது வறுமையும், பாராமுகம் காட்டும் மாநில அரசுமே என்கிறது உண்மை நிலவரம்.

மூளை அழற்சி நோய் கடுமையாக தாக்கியுள்ள ஹிச்சாரா கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் கூட கழிவறை வசதியோ, தண்ணீர் வசதியோ, எரிவாயு வசதியோ இல்லை. 

அரைகுறை ஆடையுடன் வெட்டவெளியில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. மின்சாரம் இருக்கிறது. ஆனால் மின் விசிறி இல்லை.  45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்து குழந்தைகள் தப்பிக்க எந்த வழியும் இல்லை.

குடிக்க சுத்தமான தண்ணீர் கூட இல்லை. பிறகு எப்படி ஆரோக்கியமான உணவை வழங்க முடியும் என்கிறார் 3 குழந்தைகளின் தாய் ஒருவர்.

எங்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. ஓட்டுக்காக மட்டுமே எங்களைத் தேடி வருவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள் என்கிறார் அவர்.

 பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 626 குழந்தைகள், மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் நோய் தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக முசாஃபர்பூர் மாவட்டத்தில் 117 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதுதவிர பாகல்பூர், கிழக்கு சம்பரான், வைஷாலி, சமஸ்திபூர் ஆகிய மாவட்டங்களிலும் குழந்தைகள் உயிரிழந்தன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 520 பேருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து காணப்பட்டது. உயிரிழந்த 110 குழந்தைகளுக்கும் குளுக்கோஸ் அளவு குறைவாகவே இருந்தது. அதனால்,  ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து இருப்பது, மூளை அழற்சி நோயின் முக்கிய அறிகுறியாக கூறப்படுகிறது.

இவ்வாறு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென குறைவதற்கு, லிச்சி பழம்தான் காரணம் என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், லிச்சி பழத்தை உண்ணும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மூளை அழற்சி நோய்க்கு வெறும் லிச்சி பழத்தை மட்டுமே குற்றவாளியாக்கி விட முடியாது என்பது நன்கு புரிகிறது. ஊட்டச்சத்துக் குறைவாக இருக்கும் குழந்தைகள் லிச்சிப் பழம் சாப்பிடும் போது, கடும் வெயிலில் அவதிப்படும் நிலையில் மூளை அழற்சி நோய் ஏற்படுகிறது.

தேசிய குடும்ப சுகாதாரத் துறையின் ஆய்வில், முசாபர்பூரில் உள்ள குழந்தைகளின் புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், 60 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாவும், 40 சதவீதக் குழந்தைகள் சராசரி எடையை விடக் குறைவாக இருப்பதாகவும் கூறுகிறது.கடந்த ஆண்டுகளில் மட்டும் இந்த மூளை அழற்சி நோயால் 1,350 குழந்தைகள் மரணித்திருக்கிறார்கள். 

எனவே, பணக்கார வீட்டுக் குழந்தைகளும் தான் லிச்சிப் பழம் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களை மூளை அழற்சி நோய் தாக்குவதில்லையே ஏன்? என்பதுதான் தற்போது எழும் கேள்வி.

இதுமட்டுமல்ல, குழந்தைகளை மரணம் வரை கொண்டு செல்ல லிச்சிப் பழத்தோடு சேர்ந்து பல காரணிகள் உள்ளன. சாலை வசதி இல்லாதது, ஒரு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.500 முதல் ரூ.1000 ஆக, ஏழை மக்களால் செலவிட முடியாத ஒன்றாக இருப்பது போன்றவையும் தான்.

தற்போது ஆம்புலன்ஸ் இலவசமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மரணித்தக் குழந்தைகளுக்கு யார் நியாயம் கேட்பது?

இதற்கெல்லாம் மணிமகுடமாக, கடந்த வாரம் பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தின் போது, கிரிக்கெட் ஸ்கோர் எவ்வளவு என்று கேட்டதும், அவரது வாகனத்துக்காக ஆம்புலன்ஸ்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டதும் சும்மா சின்ன சின்ன உதாரணங்கள்.

மக்களின் வாழ்வாதாரத்தை சற்று உயர்த்தினாலே போதும், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கலாம் என்பது நன்கு தெரிந்தும், அதற்கான நடவடிக்கையில் இறங்காமல் இப்படி அலட்சியமாக இருப்பதும், நோய் தாக்கிய பிறகு இலவசமாக ஆம்புலன்ஸ் கொடுப்பதும், இலவச சிகிச்சை அளிப்பதிலும் என்ன பலன்...

ஆள்பவர்கள் சற்று யோசித்தால் இந்த மரணங்களை தடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com