
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு 3 கடிதங்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தில் 58,669 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தால், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசியலமைப்பு அமர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை.
கடந்த 1988ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களின் எண்ணிக்கை 18ல் இருந்து 26ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2009ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 31ஆக உயர்த்தப்பட்டது.
இதை கவனத்தில் கொண்டு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கிறேன். அப்படி உயர்த்துவதால், மனுக்கள் மீது உரிய காலத்தில் நீதி வழங்க வேண்டும் என்ற இலட்சியத்தில் உச்சநீதிமன்றத்தால் மிகவும் சிறப்பாக செயல்பட முடியும்.
உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களில் நிலவும் காலி பணியிடமும் ஒரு முக்கிய காரணம். தற்போதைக்கு உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 399 நீதிபதி (37 சதவீதம்) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62}இல் இருந்து 65}ஆக அதிகரிக்க வேண்டும். இப்படி ஓய்வு வயதை உயர்த்துவதன் மூலம், நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக இருப்பதால் எழுந்துள்ள பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும்.
தேக்கமடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும். நாடாளுமன்ற நிலைக்குழுக்களாலும் இதுகுறித்து அரசுக்கு தொடர்ந்து பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது என்று அந்த கடிதங்களில் ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.