
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் மருத்துவமனை ஒன்றின் அருகில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில், முசாஃபர்பூரில் மட்டும் 127 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் மனித எலும்புக் கூடுகள் கிடந்தன. இதையடுத்து, பத்திரிகையாளர்கள் அந்த இடத்தை முகாமிட்டு மருத்துவமனையின் நிர்வாகிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டனர். அதற்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுனில் குமார் சகி கூறியதாவது:
உறவினர்கள் யாரும் கோரப்படாத உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முறைப்படி தகனம் செய்யப்படுகின்றன. இறந்த உடல்கள் தகனம் செய்யப்படும் இடத்தில்தான் இந்த எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் மனிதத்தன்மையுடன் இந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் அவர்.
மாநிலத்தில் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்த மருத்துவமனையில்தான், மூளை அழற்சி பாதிப்புக்கு 107 பேர் உயிரிழந்தனர்.