பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பொருளாதார நிபுணர்கள், தொழில் துறை தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்கள்.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்கள்.

மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பொருளாதார நிபுணர்கள், தொழில் துறை தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

2019}20ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் அடுத்த மாதம் 5}ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.  இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மோடி அரசு தாக்கல் செய்யவிருக்கும் முதல் பட்ஜெட் இதுவாகும். 

பட்ஜெட் தயாரிப்புக்கு முன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார்.

உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி முடக்கம், வாகனங்களின் விற்பனை சரிவு,  எரிபொருள் நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டின் (2018}19) நான்காவது காலாண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.6 சவீதமாக சரிந்து காணப்பட்டது. இதேபோல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக, புள்ளியியல் துறை அண்மையில் தெரிவித்தது.

மறுபுறம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நீதி ஆயோக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

அதில், நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2024}ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக (5 டிரில்லியன் டாலர்) உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மோடி அறிவித்தார். 

அந்த இலக்கை எட்டுவது சவாலான காரியமாக இருந்தாலும்,  அது சாத்தியமானதுதான்; அதற்கான பணிகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தில்லியில் ஆலோசனைக்  கூட்டத்துக்கு மத்திய கொள்கைக் குழுவான "நீதி ஆயோக்' சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

"பொருளாதாரக் கொள்கை} வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொருளாதார நிபுணர்கள், தொழில் துறைத் தலைவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

அவர்களிடம், நாட்டின்  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாயம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால்கள், பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் குறிப்பிட்ட காரணிகளைக் கண்டறிதல், அந்த முட்டுக்கட்டைகளைக் களைவதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் கேட்கப்பட்டன. 

துறை ரீதியிலான பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய 5 கருத்தாக்கங்களின் கீழ் நிபுணர்களும், தொழில் துறையினரும் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கியதாக, பிரதமர் அலுவலகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுடனான கலந்துரையாடல் பலனளிக்கும் விதமாக இருந்ததாகவும், அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருந்ததாகவும், மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com