போர் பதற்றம் எதிரொலி: ஈரான் வான்வெளியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு

ஈரான் வான்வெளி வழியே விமானங்களை இயக்குவதை தவிர்ப்பது என்று இந்திய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
போர் பதற்றம் எதிரொலி: ஈரான் வான்வெளியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு

ஈரான் வான்வெளி வழியே விமானங்களை இயக்குவதை தவிர்ப்பது என்று இந்திய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை இந்திய விமான நிறுவனங்கள் எடுத்துள்ளன.
இதுதொடர்பாக சுட்டுரையில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
டிஜிசிஏ}வுடன் ஆலோசனை நடத்திய அனைத்து இந்திய விமான நிறுவனங்களும், ஈரானின் வான்வெளியை தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளன. இதற்குப் பதிலாக, தகுந்த வான்வெளி வழியாக விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிசிஏவின் முடிவு குறித்து ஏர் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோஹானி கூறுகையில், "ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் இயக்கப்படும் பாதையை மாற்றுவது தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது' என்றார்.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் அண்மையில் சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து,  அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "அரசியல் ரீதியிலான பதற்றம், ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களுக்காக ஈரானின் வான்வெளி வழியே பறந்து செல்வதை அடுத்த உத்தரவு வரும் வரையில் அமெரிக்க விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்திய விமான நிறுவனங்களும், ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளன. இதேபோல், பல சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரான் வான்வெளியை தவிர்க்கும் முடிவை ஏற்கெனவே எடுத்துள்ளன.
ஜம்மு}காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலை அடுத்து, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் இந்தியா}அமெரிக்கா, இந்தியா}ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் விமானங்கள் ஏற்கெனவே தங்களது பாதையை மாற்றிக் கொண்டு பயணித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com