மத சுதந்திரம்: மோடி அரசுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை: பாஜக குற்றச்சாட்டு

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக உள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக உள்ளது என்று பாஜக கூறியுள்ளது. சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜகவைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கோபமூட்டும் வகையில் அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டனர்.
சில தீவிரமான ஹிந்து அமைப்புகள், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக கும்பல் தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக, இறைச்சிக்காக பசுக்களைக் கொல்கிறார்கள் அல்லது விற்பனை செய்கிறார்கள் என பரவிய  வதந்திகள் காரணமாக, முஸ்லிம் சமூகத்தினர் ஆண்டு முழுவதும் தாக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஊடகப் பிரிவின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அனில் பலூனி கூறியதாவது:
சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை வடிவமைக்கப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது. ஆனால், பெரும்பாலான வன்முறைச் சம்பவங்கள், உள்ளூர் பிரச்னைகள் காரணமாக, சமூக விரோத கும்பல்களால் நிகழ்த்தப்பட்டவை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, பிரதமர் மோடியும், பாஜகவைச் சேர்ந்த பிற தலைவர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் நிகழும்போது முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் அளவுக்கு இந்தியா சுதந்திரமான, ஜனநாயகம் நிறைந்த நாடாக உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக, அமெரிக்காவின் அறிக்கையில் இந்த உண்மை முற்றிலுமாக மறைக்கப்பட்டு விட்டது.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் இயங்கும் பாஜக தலைவர்கள், "அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரதமர் மோடி அமல்படுத்திய மிகப்பெரிய திட்டங்களால்,  நாட்டின் அனைத்துப் பகுதிகளில் வசிப்பவர்களும், அனைத்து ஜாதியினரும், அனைத்து மத்தினரும் பலனடைந்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com