மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை: பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் குழுக்கள் ஆய்வு

மேற்கு வங்கத்தின் பாத்பாரா பகுதியில் சனிக்கிழமை மீண்டும் வன்முறை மூண்டது. இருதரப்பினருக்கிடையே நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், பாத்பாராவில் மீண்டும் சனிக்கிழமை வன்முறை மூண்டதை அடுத்து,   நிலைமையைக் கட்டுப்படுத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர்.
மேற்கு வங்க மாநிலம், பாத்பாராவில் மீண்டும் சனிக்கிழமை வன்முறை மூண்டதை அடுத்து,   நிலைமையைக் கட்டுப்படுத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர்.

மேற்கு வங்கத்தின் பாத்பாரா பகுதியில் சனிக்கிழமை மீண்டும் வன்முறை மூண்டது. இருதரப்பினருக்கிடையே நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாத்பாரா பகுதியில் வியாழக்கிழமை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் இந்த வன்முறைக்கு ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சுமத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 16 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனிடையே, இதே மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை தாக்கியதில் பலத்த காயமடைந்த பாஜக தொண்டர் ஒருவர், சனிக்கிழமை உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய பாஜக குழு அப்பகுதியை சனிக்கிழமை ஆய்வு செய்தது. இருந்தபோதும், அவர்கள் ஆய்வுசெய்துவிட்டுத் திரும்பிய பிறகு, அப்பகுதியில் வன்முறை மீண்டும் மூண்டது. 

பாஜகவினரும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில், பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்.

பாஜக குழு ஆய்வு: வன்முறை நிகழ்ந்த பாத்பாரா பகுதியை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய பாஜக குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது.

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், வன்முறைச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்களிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அந்த ஆய்வறிக்கையை பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் அந்தக் குழு அளிக்கவுள்ளது.

காவல் துறையினரே காரணம்: ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் எஸ்.எஸ். அலுவாலியா கூறியதாவது:

வன்முறை தொடர்பாக நாங்கள் விரிவாக ஆய்வு நடத்தினோம். அதில், பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்த அதி திறன் மிக்க துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே 2 பேர் உயிரிழந்தனர். வானத்தை நோக்கிச் சுட்டதாகவே காவல் துறையினர் தெரிவித்து வருகின்றனர். அப்படியிருந்தால், அங்குக் கூடியிருந்தவர்கள் காயம்பட்டது எவ்வாறு என்று அவர் கேள்வி எழுப்பினார். 

தடையுத்தரவு மீறல்: இந்த ஆய்வு குறித்து திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ""வன்முறை நிகழ்ந்த இடத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் பாஜக குழு ஆய்வு செய்துள்ளது. 

இதன் மூலம் 144 தடையுத்தரவை பாஜக மீறியுள்ளது. அதற்காக காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்கிறது'' என்றார்.

காங்கிரஸ் குழு ஆய்வு: முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் தலைவரும் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு வன்முறை நிகழ்ந்த பகுதிகளை சனிக்கிழமை காலை பார்வையிட்டது. பின்னர், வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.  

சமூக விரோதிகளே காரணம்: வன்முறை தொடர்பாகக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கூறுகையில், ""வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் வானத்தை நோக்கிதான் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் எவ்வாறு இருவர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை. இந்த வன்முறையில் 6 காவல் துறையினரும் காயமடைந்தனர். பாத்பாராவில் சில சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பாத்பாரா பகுதியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்ட காவல் ஆணையரை மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்தது. 

பாத்பாராவில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான பாஜக குழு.

இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

வன்முறை காரணமாக, பாத்பாரா பகுதியில் பெரும்பாலான கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் பாத்பாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

அதில், பாஜக தலைவர் அர்ஜூன் சிங்கின் மகன் பவண் சிங், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான மதன் மித்ராவைத் தோற்கடித்தார். 

இதைத் தொடர்ந்து, பாத்பாரா பகுதியில் பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்குமிடையே தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com