இந்தியர்களின் உரிமைகளில் வெளிநாடுகளுக்கு அதிகாரமில்லை

மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. "அரசமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ள இந்திய குடிமக்களின் உரிமைகள் குறித்து பேச வெளிநாட்டு அரசுக்கு
இந்தியர்களின் உரிமைகளில் வெளிநாடுகளுக்கு அதிகாரமில்லை


மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. "அரசமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ள இந்திய குடிமக்களின் உரிமைகள் குறித்து பேச வெளிநாட்டு அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை' என்றும் இந்தியா கூறியுள்ளது. 

2018-ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. "உலக நாடுகளில் நிலவும் மதச் சுதந்திரத்தின் மீதான மதிப்பீடு இது' என்று கூறி அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பேயோ அந்த அறிக்கையை வெளியிட்டார். 

அதில், "இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மாட்டிறைச்சிக்காக பசுக்களை வர்த்தகம் செய்ததாகவும், கொன்றதாகவும் வதந்திகள் பரவின. அந்தச் சூழலில் இந்தியாவில் முஸ்லிம்கள் மீது ஹிந்து தீவிரவாத குழுக்களின் கும்பல் தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்தது' என்று கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கை தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: 

மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதற்காகவும், மதச்சார்பின்மைக்கான சான்றுகளை கொண்டிருப்பதற்காகவும், சகிப்புத்தன்மை மற்றும் அனைவர் மீதான அரவணைப்பு மூலம் நீண்டகாலமாக பன்முக சமூகத்தை தன்னகத்தே கொண்டிருப்பதற்காகவும் இந்தியா பெருமை கொள்கிறது. 

சிறுபான்மையின சமூகத்தினர் உள்பட அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. 

மதச் சுதந்திரத்துக்கான பாதுகாப்பு வழங்கும் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நிர்வாக முறை, அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்ட விதிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய துடிப்பு மிக்க ஜனநாயகமாக இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அரசமைப்புச் சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள இந்திய குடிமக்களின் உரிமைகள் குறித்து பேச வெளிநாட்டு அரசுகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ சட்டப்பூர்வ அதிகாரம் கிடையாது என்று ரவீஷ் குமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com