பரோல் கேட்கும் பாலியல் மற்றும் கொலைக் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம்: பாஜக அமைச்சர்கள் ஆதரவு

பாலியல் மற்றும் கொலைக் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீமுக்கு பரோல் வழங்க பாஜக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
பரோல் கேட்கும் பாலியல் மற்றும் கொலைக் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம்: பாஜக அமைச்சர்கள் ஆதரவு


பாலியல் மற்றும் கொலைக் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீமுக்கு பரோல் வழங்க பாஜக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். இவர், சீடர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு, பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 20 ஆண்டு சிறைத் தண்டனையும், பத்திரிகையாளர் கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இவர் தனது சிறைத் தண்டனையில் ஒரு ஆண்டு காலம் அனுபவித்துள்ள நிலையில், தற்போது பரோல் கேட்டுள்ளார். இவரது பரோல் கோரிக்கைக்கு ஹரியாணா அமைச்சர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், "பரோல் கேட்பது அவரது உரிமை" என்றார். 

சிறைத் துறை அமைச்சர் கே.எல். பன்வார் கூறுகையில், "அவர் வைத்துள்ள கோரிக்கையை, சிர்சா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகு, அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம். அந்த நோக்கம் இருந்தால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்போம்" என்றார். 

ஆகஸ்ட் 25, 2017-இல், இவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போது, பஞ்ச்குலா மற்றும் சிர்சா மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 41 பேர் உயிரிழந்தனர், 260 பேர் படுகாயமடைந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் இவருக்கு இடைக்கால பிணை வழங்க மறுத்தது. 

எனவே, இவருக்கு பரோல் வழங்கினால் மீண்டும் அதுபோன்ற சூழல் நிலவ வாய்ப்புள்ளதா என்பதை அறிய சிர்சா மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பதிலுக்காக காத்திருக்கிறது.

சிறைக் கண்காணிப்பாளரின்படி, குர்மீத் ராம் ரஹீம் சிறையில் பெரும்பாலும் காய் மற்றும் பழங்களை விளைவிப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவார். 

குர்மீத் ராம் ரஹீம், தனது ஆதரவாளர்களை அரசியல் கட்சிகளின் வாக்குகளாக மாற்றுக்கூடிய திறன் கொண்டமையால் அரசியல் கட்சிகள் மத்தியில் இவருக்கு பெரிய செல்வாக்கு உள்ளது. ஹரியாணாவில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இவருக்கு பரோல் வழங்கி தனக்கான ஆதரவை பெருக்கிக் கொள்ள பாஜக எண்ணுவதாக, அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com