கச்சோரி விற்று ரூ.1 கோடி சம்பாதிக்கும் உ.பி. கோடீஸ்வரர்! பொறி வைத்துப் பிடித்தது வரித்துறை!

உத்தரப்பிரதேசத்தில் கச்சோரி விற்று ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கும் கோடீஸ்வரரைப் பற்றி தெரிஞ்சிக்கணுமா?
கச்சோரி விற்று ரூ.1 கோடி சம்பாதிக்கும் உ.பி. கோடீஸ்வரர்! பொறி வைத்துப் பிடித்தது வரித்துறை!


அலிகார்: உத்தரப்பிரதேசத்தில் கச்சோரி விற்று ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கும் கோடீஸ்வரரைப் பற்றி தெரிஞ்சிக்கணுமா?

சற்று முன்புதான், ரூ.1 கோடி செலவிட்டு எம்பிபிஎஸ் படித்தும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு வேலை செய்யும் மருத்துவர்களைப் பற்றிய தகவலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

அடுத்த அதிர்ச்சியாக உ.பி.யில் கச்சோரி விற்று ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இளைஞரைப் பற்றி பார்க்கலாம். (லேசாக தலை சுற்றினால் ஓரமாக உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே தொடரலாம்)

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கச்சோரி விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் முகேஷ்.  முகேஷ் கச்சோரி கடை என்றால் அப்பகுதி மக்களுக்கு அத்துப்படி. சீமா திரையரங்குக்குப் பக்கத்தில் இருக்கும் இவரது கடையில் காலையில் ஆரம்பித்து இரவு வரை கச்சோரி, சமோசா போன்றவை விற்கப்படுகிறது. ஆனால், இவரது கடையில் கச்சோரி வாங்க நிற்கும் கூட்டத்துக்கு மட்டும் எப்போதும் முடிவே இல்லை.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் முகேஷ் கச்சோரி கடையின் வருவாய் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பு சொல்லுவதற்கு முன்பு வரை.

கச்சோரி கடையின் வருவாய் குறித்து அறிந்து கொண்ட அதிகாரிகள், முகேஷ் கச்சோரி கடைக்கு பக்கத்து கடையில் அமர்ந்து கொண்டு வருவாயைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. ஆம், முகேஷ் கச்சோரி கடையில் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்குமாம். யார் கண்டது, அதற்கு மேலும் இருக்கும் என்று சந்தேகிக்கிறார்கள்.

இவர் தனது கடையை ஜிஎஸ்டியில் பதிவும் செய்யவில்லை, இதுவரை ஒரு செல்லாதக் காசைக் கூட வரியாகக் கட்டவில்லை. இது குறித்து முகேஷுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது பற்றி எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. கடந்த 12 ஆண்டுகளாக நான் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று என்னிடம் யாருமே சொல்லவில்லை. வெறும் கச்சோரியும், சமோசாவும் விற்று பிழைப்பு நடத்துகிறோம் அவ்வளவே என்கிறார் முகேஷ் ரொம்ப சாதாரணமாக.

இதுகுறித்து விசாரணை நடத்தும் மாநில புலனாய்வுத் துறையினர், முகேஷ் தனது வருவாய் குறித்து ஒப்புக் கொண்டுள்ளார். கச்சோரி தயாரிக்கத் தேவையான மாவு, எண்ணெய், எல்பிஜி சிலிண்டர் ஆகியவற்றுக்கான செலவுக் கணக்கையும் காட்டியுள்ளார். அவர் உடனடியாக ஜிஎஸ்டியில் தனது கடையைப் பதிவு செய்து ஓராண்டுக்கான வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், யார் ஒருவரும், ஆண்டுக்கு 40 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால் நிச்சயம் அவர் ஜிஎஸ்டியில் பதிவு செய்து, வரியை செலுத்த வேண்டும் என்கிறார்கள் புலனாய்வுத் துறையினர்.

என்ன கச்சோரி செய்வது எப்படி என்ற விடியோவைத்தானே தேடப் போறீங்க? போங்க போங்க!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com