சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் பெரும் பிரச்னையாக உள்ளது: நிதின் கட்கரி

சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் பெரும் பிரச்னையாக உள்ளது என மத்திய சாலைப் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம்
சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் பெரும் பிரச்னையாக உள்ளது: நிதின் கட்கரி


சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் பெரும் பிரச்னையாக உள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை அமைக்கும் பணிகள் தாமதமாவது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதின் கட்கரி பதிலளித்ததாவது:
சாலை அமைக்கும் திட்டங்கள் தாமதமாவதற்கு நிலம் கையகப்படுத்துதலே முக்கியக் காரணமாகும். அப்பணி பெரும் பிரச்னையாகவும் செலவு மிக்கதாகவும் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் அதீத செலவை மத்திய அரசால் மட்டும் ஏற்க முடியவில்லை. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க மாநில அரசுகளும் முன்வந்து உதவ வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்படும் சாலைகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை ஏற்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுபோல் மற்ற மாநிலங்களும் முன்வர வேண்டும். அப்போதுதான், சாலைத் திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படும்.
நிலம் கையகப்படுத்துதல் என்பது மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய பணியாகும். அதில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை. மாவட்ட ஆட்சியர்களே நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வர். கையகப்படுத்துவதற்குத் தேவையான தொகையை மத்திய அரசு வழங்கிவிடும். ஒரு திட்டத்துக்குத் தேவையான 80 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பிறகே, அத்திட்டங்களுக்கான பணிகள் தொடங்கும். 
பணிகள் துரிதம்: நரேந்திர மோடி முதல் முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றபோது, சுமார் ரூ.3.85 லட்சம் கோடி மதிப்பிலான 403 சாலைத் திட்டங்கள் நிலுவையில் இருந்தன. ஆனால், தற்போது 90 சதவீதத் திட்டங்கள் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும். பாரத்மாலா-2  திட்டத்தின் கீழ் 65,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், சுமார் 8,000 கி.மீ. தூரத்துக்கான சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இத்திட்டங்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய நிதியமைச்சகத்திடம் இருந்து நாங்கள் நிதி பெறவில்லை. பங்குகளை விற்பதன் மூலம் நாங்களே நிதி திரட்டிக் கொள்கிறோம்.
அதிக சாலை விபத்துகள்: சாலை விபத்துகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில்தான் அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில், சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மக்கள்தொகை பெருகி வருவதால், சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, சாலையை அகலப்படுத்த வேண்டிய சூழல் எழுகிறது. அத்தகைய நேரங்களில், சாலையோரங்களில் உள்ள மரங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் நிதின் கட்கரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com