பாஜகவின் பொய் பிரசாரம் வெளிப்பட்டுள்ளது: காங்கிரஸ்

2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பாஜக குற்றம்சாட்டியது, அவர்களை சிறையில் தள்ளுவோம் என்று
மக்களவையில் திங்கள்கிழமை பேசிய அதிர் ரஞ்சன் செளதரி.
மக்களவையில் திங்கள்கிழமை பேசிய அதிர் ரஞ்சன் செளதரி.

2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பாஜக குற்றம்சாட்டியது, அவர்களை சிறையில் தள்ளுவோம் என்று பிரசாரம் செய்தது, ஆனால், அவர்கள் இருவரும் இப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளனர். இதன் மூலம் பாஜக பொய் பிரசாரம் வெளிப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திங்கள்கிழமை பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளதரி, பாஜக மீதும் மத்திய அரசு மீதும் அடுக்கடுக்கான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் வரை பேசிய அவர் கூறியதாவது:
இப்போதைய மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றை கடைப்பிடித்து வருகிறது. அது அரசியலில் மற்றவர்களின் சாதனைகளை தனது சாதனை என்று கூறி பெயர் வாங்கிக் கொள்வதாகும். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 23 திட்டங்களில் 19 திட்டங்களை பெயரை மட்டும் மாற்றி அப்படியே செயல்படுத்திவிட்டு, தங்கள் அரசின் திட்டங்கள் என்று இப்போதைய ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். 
அரசியல் திருட்டு: இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எதையுமே செய்யவில்லை; எங்கள் ஆட்சியில்தான் அனைத்தையும் கொண்டு வந்து சாதனை படைத்தோம் என்பதுபோல பேசி வருகிறார்கள். இது அப்பட்டமான பொய். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை உங்கள் சாதனை என்று கூறி பெயர் வாங்குவதை அரசியல் திருட்டு என்றுதான் கூற வேண்டும்.
காங்கிரஸின் சாதனைகள்: பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி போன்றவை காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தியது, ஒஎன்ஜிசி, இந்தியன் ஆயில், என்டிபிபி, எச்ஏஎல் போன்ற மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியது, எஸ்பிஐ போன்ற மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளை ஏற்படுத்தியது காங்கிரஸ் ஆட்சியில்தான். இந்த நாட்டை அடிப்படையில் இருந்தே கட்டமைத்தது காங்கிரஸ் கட்சியும், அதன் ஆட்சியும்தான்.
போராட்டம் தொடரும்: காங்கிரஸ் இந்திய மண்ணின் ஆத்மா போன்றது. இந்தியாவுக்கு மறுபெயர் காங்கிரஸ் என்றால் அது மிகையாகாது. கட்சியைவிட நாடே முக்கியம் என்று வாழ்ந்து நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 52 உறுப்பினர்கள் மட்டும் இருக்கலாம். ஆனால், சாமானிய மக்களுக்கான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும்.
குடியரசுத் தலைவர் உரையில் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பெயரை ஓரிடத்தில் கூட குறிப்பிட இந்த அரசுக்கு மனமில்லை. இது இந்த அரசின் மோசமான மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவை சாமானிய மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காப்பதற்காக காங்கிரஸ் கொண்டுவந்தவை. பாகிஸ்தானை ஏவுகணை கொண்டு தாக்குவோம் என்று நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், அந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
பிரதமரைப் புகழும் அமைச்சர்கள்: இங்கு ஒரு அமைச்சர் (பிரதாப் சாரங்கி) பிரதமர் மோடியை வரம்பு கடந்து புகழ்ந்து பேசியுள்ளார். பாஜக அமைச்சர்களும், எம்.பி.க்களும் அதனையே பின் தொடர்கின்றனர். ஏனெனில் அவரைப் புகழ்ந்தால் மட்டும்போதும், அவர் தங்களை கவனித்துக் கொள்வார் என்பது அவர்களுக்குத் தெரியும்.  நமது பிரதமர் தந்திரப் பேச்சுகளால்தான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது. காங்கிரஸ் கட்சியால் அப்படிப் பேசி தேர்தலில் வெல்ல முடியவில்லை. 2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் ஆகியவற்றில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை குற்றம்சாட்டினீர்கள். அவர்களை சிறையில் தள்ளுவோம் என்று பிரசாரம் செய்தீர்கள். ஆனால், அவர்கள் இருவரும் இப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளனர். இதன் மூலம் உங்கள் பொய் பிரசாரம் வெளிப்பட்டுள்ளது.
நாடு வறட்சியின் பிடியில் உள்ளது. ஆனால் மத்திய அரசு எதுவுமே நடக்காததுபோல உள்ளது. பாஜக பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துவிட்டது. அதனை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என்றார்.
செளதரி பேசியபோது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேஜையைத் தட்டி வரவேற்றார். அதே நேரத்தில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து செளதரியின் பேச்சுக்கு அவ்வப்போது எதிர்ப்பு எழுந்தது. அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவையில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com