முத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம்: பிரதமர் மோடி

முத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 
முத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம்: பிரதமர் மோடி


முத்தலாக் தடை மசோதாவை மதத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி மக்களவையில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

"பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தேசம் வலிமையான தீர்ப்பை அளித்துள்ளது. ஆளும் அரசுக்கே மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிந்திக்கின்றனர் என்பது தெரிகிறது. தேர்தலை நான் வெற்றி தோல்வியாக பார்க்கவில்லை. 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு மற்றும் இந்திய மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்காக உழைப்பது தான் எனக்கு முக்கியமானது. 

கடந்த 70 ஆண்டுகளாக இருப்பதை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்று எனக்கு தெரியும். எங்களுடைய பிரதான இலக்கில் இருந்து நாங்கள் வழி தவறவில்லை. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். 

2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த அரசுக்கு சவால் விடுகிறேன். வாஜ்பாய் அரசின் நலப் பணிகளை அவர்கள் எப்போதாவது பாராட்டியது உண்டா. நரசிம்ம ராவ் அரசின் நல்ல திட்டங்கள் குறித்து பேசியதுண்டா. இந்த விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் குறித்து கூட பேசவில்லை. 

நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களாக ஒரு சிலரது பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். இதனால், மற்ற பெயர்களை இவர்கள் புறக்கணிக்கின்றனர். ஆனால் நாங்கள் மாற்றி யோசிக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து குடிமக்களும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.  

இன்று ஜூன் 25. நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது யார்? அந்த இருண்ட நாட்களை மறக்க முடியாது. 

ஒரு சில நபர்களை சிறையில் அடைக்கவில்லை என்று நாம் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளோம். அரசு யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்பதற்கு இது நெருக்கடி நிலை இல்லை. இது ஜனநாயக நாடு. யாரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதித் துறை முடிவு செய்யும்.

சர்தார் சரோவர் அணை, சர்தார் படேலின் யோசனை. ஆனால், அந்த அணைக்கான பணிகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை துரிதப்படுத்தினேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, அணைக்கான பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டது. அது பல்வேறு மக்களுக்கு பலனளிக்கிறது. 

இன்று நாம் நீர் மேலாண்மை குறித்து பேசும்போது, நான் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கொள்கிறேன். நீர் மேலாண்மை மற்றும் நீர் பாசனத்துக்காக அம்பேத்கர் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.

சுதந்திரத்துக்காக தைரியமான பெண்கள் மற்றும் ஆண்கள் உயிர்நீத்தனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தை அனைவரும் மிகுந்த உத்வேகத்துடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொது சிவில் சட்டம் மற்றும் ஷா பானோ வழக்கு போன்ற வாய்ப்புகளை காங்கிரஸ் தவறவிட்டுள்ளது. இன்றைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மசோதாவை கொண்டு வந்துள்ளோம். இதனை மதத்துடன் இணைக்க வேண்டாம். 

ஷா பானோ வழக்கு சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான அமைச்சர்களுள் ஒருவர் அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. "முஸ்லிம்களை சீர்த்திருத்துவது காங்கிரஸ் கட்சியின் பணியல்ல, அவர்களுக்கு சாக்கடையிலே இருக்க வேண்டும் என்றால் இருக்கட்டும்" என்று மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com