லவாசாவின் குறிப்பை வெளியிட்டால் தனிநபரின் உயிருக்கு ஆபத்து நேரும்: தேர்தல் ஆணையம்

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் விவகாரத்தில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்த ஆட்சேபக் குறிப்புகளை வெளியிடுவது என்பது
லவாசாவின் குறிப்பை வெளியிட்டால் தனிநபரின் உயிருக்கு ஆபத்து நேரும்: தேர்தல் ஆணையம்


பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் விவகாரத்தில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்த ஆட்சேபக் குறிப்புகளை வெளியிடுவது என்பது, தனிநபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அந்தப் புகார்களை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்த ஆட்சேபக் குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்றொரு தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா ஆகியோரின் பெரும்பான்மை கருத்துகள்அடிப்படையில், இதில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதே போல் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் தொடர்பான பல்வேறு புகார்களில், லவாசாவின் குறிப்புகள் 11 முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
இதையடுத்து, தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் தொடர்பாக நடைபெறும் விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை என தேர்தல் ஆணையத்துக்கு லவாசா கடிதம் எழுதினார். 
இது தொடர்பாகக் கடந்த மாதம் 21-ஆம் நடைபெற்ற தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் தொடர்பாகன விசாரணையில் தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கும் ஆட்சேபக் கருத்துகள், தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் இடம்பெறும். ஆனால், அந்த விவரம் தேர்தல் ஆணையம் வெளியிடும் இறுதி அறிக்கையில் இடம்பெறாது என்று முடிவுசெய்யப்பட்டது.
அந்த இறுதி அறிக்கைகள் புகார் தெரிவித்தவர்களுக்கும், புகாருக்கு உள்ளானவர்களுக்கும் அனுப்பப்படும் என்பதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதென தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லவாசா தெரிவித்த ஆட்சேபக் குறிப்புகளை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தின் புணேவைச் சேர்ந்த விகார் துர்வே என்பவர் மனு அளித்தார். மேலும், நரேந்திர மோடி மீதான புகார்களை ரத்து செய்ததற்கான வழிமுறைகளை அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.
அந்த மனுவுக்குத் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், மனுதாரர் கோரும் தகவல்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(ஜி)-ன் கீழ் விலக்களிக்கப்பட்ட ஒன்றாகும். அதை வெளியிடுவது தனிநபரின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, அத்தகவல்களை வெளியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com