வலுவான கூட்டணியை நாடு முழுவதும்  அமைக்கத் தவறியதால் காங்கிரஸ் தோல்வி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏன் தோல்வியை சந்தித்து என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
வலுவான கூட்டணியை நாடு முழுவதும்  அமைக்கத் தவறியதால் காங்கிரஸ் தோல்வி


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏன் தோல்வியை சந்தித்து என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திங்கள்கிழமை அவர் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. ஆனால், தமிழகத்தில் அந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஏனெனில், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வலுவான கூட்டணியை அமைத்தன. இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. 
இதுபோன்ற வலுவான கூட்டணியை நாடு முழுவதும் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. அதன்காரணமாக, அந்தக் கட்சி தோல்வியைத் தழுவி விட்டது.
மேலும், காங்கிரஸ் கட்சி, மென்மையான ஹிந்துத்துவக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால், பாஜகவோ தீவிரமான ஹிந்துத்துவக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இரு கொள்கைகளுக்கும் இடையேயான போட்டியில், தீவிர ஹிந்துத்துவக் கொள்கை வெற்றிபெற்று விட்டது. அதுமட்டுமன்றி, பிற கட்சிகள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி விட்டன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சுருங்கிவிட்டது வருத்தத்துக்குரிய விஷயம். நாங்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம். ஏனெனில், மார்க்சியத்துக்கு அழிவு கிடையாது. ஏனெனில், அது வாழ்வியல் தத்துவம்.
கடந்த 5 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மை அதிகரித்தது. சிறுபான்மையினர், பெண்கள், தலித் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தனை நிகழ்வுகளுக்குப் பிறகும் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. அதற்குக் காரணம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்தான்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தினந்தோறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. 
நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் மட்டுமே நல்லாட்சி வழங்கும் என்று கூற முடியாது. இதற்கு முந்தைய வரலாறுகளே சான்று.
கடந்த 5 ஆண்டுகளில் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரசாரத்துக்காக ரூ.27,000 கோடியை பாஜக செலவு செய்ததாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இது, ஒட்டு மொத்த தேர்தலுக்கும் செலவு செய்யப்பட்ட தொகையில் 45 சதவீதமாகும். இதனால்தான், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, நாராயண குரு, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோரைக் குறிப்பிட்டார். அவர், வள்ளலார், திருவள்ளுவர் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com