சுடச்சுட

  

  ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெருகும்: அரவிந்த் பனகாரியா

  By DIN  |   Published on : 26th June 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aravind


  நாட்டில் ஏற்றுமதி அதிகரித்து, அதன் அடிப்படையில் வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெருகும் என நீதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
  நீதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத் தலைவராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பதவி வகித்த அரவிந்த் பனகாரியா, தற்போது அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பனகாரியா பேசியதாவது:
  கடந்த 2003-04 நிதியாண்டு முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சீரான பொருளாதார வளர்ச்சியை இந்தியா கண்டுவருகிறது. முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 
  இது மிகவும் வலுவான வளர்ச்சியாகும்.
  1991-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களால் இந்தளவு வளர்ச்சி சாத்தியமானது. இருந்தபோதிலும், தற்போதைய காலகட்டத்தில் இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அதைப் போக்கவேண்டுமானால், 8 முதல் 10 சதவீத அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டியது அவசியமாகும். அதேபோல், ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகள் அதிகரித்தால் மட்டுமே, அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
  வர்த்தகத்தில் சீரான வளர்ச்சி கண்டால் மட்டுமே 8 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமாகும். ஏற்றுமதி அதிகரிக்கும் அதே வேளையில், நாட்டின் இறக்குமதியும் அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட நாட்டுக்கு நாம் ஏற்றுமதி செய்யும்போது, அந்நாட்டில் இருந்து சில பொருள்களை இறக்குமதி செய்தாக வேண்டும்.
  கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் 6 சதவீத வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரையில் வேலைவாய்ப்பின்மையை விட குறைந்த ஊதியமே பெரும் பிரச்னையாக உள்ளது. சுமார் 44 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ளவர்களில் 75 சதவீதத்தினர் சிறு அல்லது குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். எனவே, அவர்களுக்கு குறைந்த ஊதியமே கிடைக்கிறது.
  இந்தியாவில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களே அதிக அளவில் உள்ளன. நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமானால், நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டும் என்றார் பனகாரியா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai