சுடச்சுட

  

  ஜெய்சங்கர்-பாம்பேயோ இன்று சந்திப்பு: பயங்கரவாதம், ஹெச்1பி விசா உள்ளிட்டவை விவாதிக்கப்பட வாய்ப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaiankar


  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில், பயங்கரவாதம், ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தார். 
  மக்களவைத் தேர்தல் நடைபெற்ற பிறகு, மற்றொரு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாம்பேயோவுக்கு புதன்கிழமை மதியம் விருந்தளிக்கிறார். அதன்பிறகு, அவருடன் பேச்சுவார்த்தையிலும் ஜெய்சங்கர் ஈடுபட உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும் பாம்பேயோ சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய, அமெரிக்க நாடுகளின் தொழிலதிபர்களுடனும் பாம்பேயோ கலந்துரையாட உள்ளார்.
  பாம்பேயோவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறித்து, குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரில் செய்தியாளர்களிடம் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  மைக் பாம்பேயோவுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பாம்பேயோவுடன் விரிவாக விவாதிக்க உள்ளேன். 
  இரு நாடுகளுக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. அப்படியிருக்கும்போது, பிரச்னைகள் எழுவது சகஜமே. வர்த்தகப் பிரச்னையில் இரு நாடுகளும் பயனடையும் வகையில் தீர்வுகாண நாங்கள் முயற்சிப்போம் என்றார் ஜெய்சங்கர்.
  இந்தப் பேச்சுவார்த்தை குறித்து, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
  பாம்பேயோவுடன் ஜெய்சங்கர் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு, முன்வரையறுக்கப்பட்ட திட்டம் ஏதுமில்லை. இரு நாடுகளுக்கிடையேயான பல்வேறு முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் அவர்கள் இருவரும் ஆலோசிக்க உள்ளனர். அதிகரித்து வரும் எல்லை பயங்கரவாதம் தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். 
  ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதில் உச்சவரம்பு எதையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் நிர்ணயிக்கவில்லை என்பதை பாம்பேயோ உறுதிப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. 
  இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகமாக உள்ளதால், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்தும், மற்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்தும் பாம்பேயோவுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்றனர் அதிகாரிகள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai