சுடச்சுட

  

  நெருக்கடி நிலையை எதிர்த்தவர்களுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா நினைவஞ்சலி

  By DIN  |   Published on : 26th June 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_amithsha


  1975ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நெருக்கடிநிலையை எதிர்த்தவர்களுக்கு  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர். 
  இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வரை நாடு முழுவதும் நெருக்கடி நிலை (எமர்ஜென்ஸி) பிரகடனப்படுத்தப்பட்டது. 
  நெருக்கடிநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், நெருக்கடி நிலையை கடுமையாகவும், அச்சமின்றியும் எதிர்த்த அனைவருக்கும் நாடு வணக்கம் செலுத்துகிறது. சர்வாதிகார மனநிலையைக் கொண்ட ஒருவரின் கொள்கைகளை, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் வெற்றிகரமாக வென்று காட்டியது என்று பதிவிட்டுள்ளார்.  
  பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், நெருக்கடிநிலை நாட்டின் கரும்புள்ளியாகும். கடந்த 1975ஆம் ஆண்டு இதே நாளில்தான் காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. இதனை தேசம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக, பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நெருக்கடிநிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்து போராடின என்று பதிவிட்டுள்ளார். 
  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப்பதிவில், 1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட பிறகு நடைபெற்ற சம்பவங்கள், இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களாக கருதப்படுகின்றன. இந்த தினம்,  நாட்டு மக்களின் ஒற்றுமையையும், அரசமைப்பின் ஒருமைப்பாட்டையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார். 
  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சுட்டுரைப்பதிவில், செய்தித்தாள்களின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், நாட்டு  மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதும் மறக்க இயலாததாகும். மீண்டும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக லட்சக்கணக்கான தேசபக்தர்கள் பாடுபட்டனர். அவர்களுக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai