சுடச்சுட

  

  மேற்கு வங்கதேசம் உருவாக்க மம்தா அரசு முயற்சி: மக்களவையில் பாஜக குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 26th June 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு இடமளித்து, மேற்கு வங்கதேசம் உருவாக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திலிப் கோஷ் பங்கேற்று பேசியதாவது:
  நாட்டின் பிரதமராக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் விரும்புகிறார். மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தையும் ஒன்றாக இணைத்து, மேற்கு வங்கதேசத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு சதி நடைபெறுகிறது.
  பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தில் எந்த தவறும் கிடையாது. ஏனெனில் நாட்டுக்கு நீதி, சட்டம்-ஒழுங்கு குறித்து போதனை நடத்தியவர் இறைவன் ராமன்தான். அந்த முழக்கம், நாட்டுக்கு அவசியம் தேவையாகும். அந்த முழக்கம், நமது நாட்டுக்கு சொந்தமான முழக்கமாகும். ஆனால், ஜெய் பங்க்ளா முழக்கமோ, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
  பொதுத் தேர்தலின்போது வன்முறை நிகழ்ந்த ஒரே மாநிலம், மேற்கு வங்கம்தான். மேற்கு வங்கத்துக்கு வர வேண்டுமெனில் வங்க மொழி கற்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.
  இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசியபோது, பாஜக பீதியை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:
  கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்தே, நாட்டில் பாஜக பீதியை பரப்பி வருகிறது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது. குடியுரிமையுடன் மதத்தை பாஜக கலக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவை மூலம், ஒரு மதத்தினரை மட்டும் பாஜக குறிவைத்து செயல்படுகிறது. மாணவர்களிடையே பொய் பிரசாரம் செய்வதற்கு பாடப் புத்தகங்களையும் பாஜக மாற்றி வருகிறது.
  நாட்டின்  தேர்தல் அமைப்பு முறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாஜகவின் ஆட்சியின்கீழ், நாட்டில் அபாயகரமான பாசிசம்  வளர்ந்து வருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மிகப்பெரிய 5 ஊடகங்கள், ஒரேயொரு நபரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
  தேசிய குடியுரிமை பதிவேடு, அயோத்தி நில விவகாரம் குறித்த மொய்த்ராவின் பேச்சுக்கு பாஜகவின் மற்றோர் எம்.பி.யான நிஷிகாந்த் துபே ஆட்சேபம் தெரிவித்தார். அந்த 2 விவகாரங்களும், உச்சநீதிமன்ற  விசாரணையின்கீழ் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 
  நிஷிகாந்த் துபேயின் பேச்சுக்கு திரிணமூல் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சௌகதா ராய் கண்டனம் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai