நதிநீர் பிரச்னை: ஆந்திரம், தெலங்கானா முதல்வர்கள் 28-இல் பேச்சு

நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் வரும் 28-ஆம் தேதி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் வரும் 28-ஆம் தேதி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதற்கு முன்பு, தில்லியில் கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியின் ஏற்பாட்டின்பேரில், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிநீர் பிரச்னைகள், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆந்திரத்தின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் ஆகியோர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில்,  3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆந்திரம், தெலங்கானா இடையே வரும் 28-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அந்நிகழ்வில் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார். தெலங்கானாவில் நடைபெற்ற காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத் தொடக்க விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.
இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் இடையே நிலவும் நெருங்கிய நட்புறவும் ஒரு காரணமாகும்.இருவரிடையேயான நட்புறவினால், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் இடையேயான உறவிலும் சுமுகமான நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாதில் ஜெகன்மோகன் ரெட்டியும், கே. சந்திரசேகர் ராவும் வரும் 28-ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் இருதரப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
நதிநீர் பிரச்னைகள் தொடர்பாக இருமாநில முதல்வர்களும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தற்போது சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இருமாநிலங்களுக்கு இடையேயும் தற்போது சுமுக உறவு நிலவுகிறது. இதனால் இருமாநிலங்கள் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர்கள் இருவருக்கு இடையேயான பேச்சுவார்தையை 24ஆம் தேதி நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியர்களுடன் ஜெகன்மோகன் ரெட்டி அன்றைய தினத்தில் ஆலோசனை நடத்தியதால், 28ஆம் தேதிக்கு சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com