நேரு குடும்பத்துக்கு மட்டுமே காங்கிரஸ் அங்கீகாரம்

முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோர் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் பேசுவதில்லை
நேரு குடும்பத்துக்கு மட்டுமே காங்கிரஸ் அங்கீகாரம்


முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோர் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் பேசுவதில்லை; நேரு-காந்தி குடும்பத்தினரை தாண்டி, வேறெந்த தலைவர்களுக்கும் அக்கட்சி அங்கீகாரம் அளிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து,  அவர் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மோடி பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:
காங்கிரஸை பொருத்தவரை, நேரு-காந்தி குடும்பத்தினரை தாண்டி வேறெந்த தலைவர்கள் ஆற்றிய பணிகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதில்லை. தங்களது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் பணிகள் குறித்து கூட அவர்கள் பேசுவதில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசின் பங்களிப்புகளுக்கு எந்த அங்கீகாரமும் அளிக்கவில்லை. அதே சமயம், முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது எனது அரசு. நான் பிரதமராக பொறுப்பேற்ற நாளிலிருந்து, முன்னாள் பிரதமர்கள், மூத்த தலைவர்களின் அரும் பணிகளுக்கு அங்கீகாரம் அளித்து வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் என் மீது குற்றம்சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மோடி.. 
கருப்பு நாள்கள்: கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு நெருக்கடி நிலையை அமல்படுத்தியதன் நினைவு தினத்தை சுட்டிக் காட்டி மோடி பேசினார். அவர் கூறுகையில், நெருக்கடி நிலையை அமல்படுத்தியதன் மூலம் நாட்டின் ஆன்மாவை காங்கிரஸ் சிதைத்தது. நீதித் துறையும், ஊடகங்களும் ஒடுக்கப்பட்டன. அந்த கருப்பு நாள்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றார். 
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: மக்களவையில் கடந்த திங்கள்கிழமை பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, சோனியா, ராகுல் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், இப்போது இருவரும் சிறையில் இருக்காமல் நாடாளுமன்றத்தில் எவ்வாறு இருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான எனது அரசின் நடவடிக்கைகள் தொடரும். அரசியல் பழிவாங்கும் நோக்குடன் ஒருபோதும் செயல்பட மாட்டோம். 
ஒருவரை சிறைக்கு அனுப்புவதும், ஜாமீன் வழங்குவதும் நீதிமன்றத்தின் முடிவாகும். தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் சிறையில் தள்ளுவதற்கு இப்போது என்ன நெருக்கடி நிலையா அமலில் உள்ளது? என்று கேள்வியெழுப்பினார்.
மக்கள் பணியால் மீண்டும் ஆட்சி: கடந்த 2014-இல் காங்கிரஸிடமிருந்து விடுபடுவதற்காக பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இம்முறை பாஜகவின் பணிகளுக்கு அங்கீகாரம் அளித்து மீண்டும் வெற்றியை தந்துள்ளனர். வளர்ச்சி பாதையிலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம். 
வளர்ச்சிக்கான கொள்கைகள் நீர்த்து போக விடமாட்டோம். அரசியல் வேறுபாடுகளை விட தேச நலனையே முக்கியமாக கொண்டு உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும். வலுவான, மேம்பட்ட, அனைத்துத்  தரப்பினரையும் உள்ளடக்கிய தேசத்தை கட்டமைக்க ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றார் மோடி.
அவரது பேச்சைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com