பானி புயல் சேதம்: மக்களவையில் அறிக்கை தாக்கல்

பானி புயல் சேதம் குறித்து மக்களவையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


பானி புயல் சேதம் குறித்து மக்களவையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒடிஸா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களும் பானி புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஒடிஸா மாநிலத்தில் மட்டும் பானி புயலுக்கு 64 பேர் பலியாகியுள்ளனர். 
5.56 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 6,281 கால்நடைகள் பலியாகி விட்டன. 1.48 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 6,416 படகுகள், 8,828 மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன.
இதேபோல், சாலைகள், மின்சார கட்டமைப்பு, ரயில், தொலைத் தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன.
ஆந்திரம், மேற்கு வங்கம் மாநிலங்களில் பானி புயலுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆந்திரத்தில் 222 வீடுகள் சேதமடைந்தன. 28 கால்நடைகள் உயிரிழந்து விட்டன. 1,365 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் 29,260  வீடுகள் சேதமடைந்துள்ளன. 1.12 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பானி புயலால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஒடிஸாவில் 15,57,170 பேரும், ஆந்திரத்தில் 17,460 பேரும், மேற்கு வங்கத்தில் 2,34,801  பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ரூ.1,086 கோடி உதவித் தொகை அளித்து உதவியுள்ளது. இதில் ஒடிஸாவுக்கு ரூ.340 கோடியும், ஆந்திரத்துக்கு ரூ.200 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.235 கோடியும், தமிழகத்துக்கு ரூ.309 கோடியும் அளிக்கப்பட்டது.
ஒடிஸாவில் பானி புயலால் நேரிட்ட சேதத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தபிறகு, மத்திய அரசு கூடுதலாக ரூ.1,000 கோடி விடுவித்தது. 
பானி புயலால் பேரழிவை சந்தித்துள்ள ஒடிஸா, மத்திய அரசிடம் ரூ.5,227 கோடி உதவி கோரி மனு அளித்திருந்தது. பானி புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு குழு, ஒடிஸாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தியது. 
அந்த குழுவின் அறிக்கை கிடைத்ததும், ஒடிஸா மாநிலத்துக்கு கூடுதலாக உதவித் தொகை அளிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com