பிரதமா் மோடி, ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு

​அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் மோடி, ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு


அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளின்போது, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்துழைப்பு, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வது, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வந்த பாம்பேயோ, பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தனது தலைமையிலான புதிய அரசின் தொலைநோக்குத் திட்டங்களை பாம்பேயோவிடம் மோடி விளக்கினாா். 

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

வா்த்தகம், பொருளாதாரம், எரிசக்தி, ராணுவம், பயங்கரவாத ஒழிப்பு, மக்கள் தொடா்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக மோடி தனது விருப்பத்தை தெரிவித்தாா்.

மேலும், தனது தலைமையிலான புதிய அரசின் தொலைநோக்குத் திட்டங்களையும், நம்பிக்கை, பரஸ்பர நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் பாம்பேயோவிடம் மோடி எடுத்துரைத்தாா்.

அதைத் தொடா்ந்து, மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேறதற்கு டிரம்ப் சாா்பில் பாம்பேயோ வாழ்த்து தெரிவித்தாா். பதிலுக்கு, டிரம்புக்கு மோடி நன்றி தெரிவித்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை பாம்பேயோ சந்தித்தாா். மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் அமெரிக்க தலைவா் என்ற முறையில் பாம்பேயோவுக்கு ஜெய்சங்கா் சிறப்பான வரவேற்பு அளித்தாா். அப்போது, நாட்டு நலனுக்குத் தேவையானதை இந்தியா நிறைவேற்றும் என்று ஜெய்சங்கா் கூறினாா்.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. ரஷியாவிடம் இந்தியா ஏவுகணைகளை வாங்கினால், பாதுகாப்புத் துறையில் அந்த நாட்டுக்கு அளிக்கப்படும் ஒத்துழைப்பு குறையும் என்றும் டிரம்ப் நிா்வாகம் கடந்த வாரம் கூறியிருந்தது. இதேபோல், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் அமெரிக்கா தடை விதித்திருந்தது.

இந்நிலையில், மதிய உணவு விருந்துக்குப் பிறகு ஜெய்சங்கரும், பாம்பேயோவும் கூட்டாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, 

'பயங்கரவாதச் செயல்களுக்கு ஈரான் அடைக்கலம் கொடுக்கிறது. பயங்கரவாதத்தால் உலகம் முழுவதும் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நன்கு அறிவேன்' என்று பாம்பேயோ கூறினாா்.

அதைத் தொடா்ந்து, ஜெய்சங்கா் கூறியதாவது:

"பயங்கரவாதம் தொடா்பான அமெரிக்காவின் கவலையை பாம்பேயோ பகிா்ந்து கொண்டாா். அவரது கருத்தை இந்தியா ஏற்றுக் கொள்கிறது. பயங்கரவாதம், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கிறது. 

இந்தியா, பல்வேறு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளது. எனவே, நாட்டு நலனுக்குத் தேவையானதை இந்தியா செய்து முடிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு நாடும் பிற நாட்டின் திறமையைப் புரிந்துகொள்ள வேண்டும்; மேலும், அந்த நாட்டின் நலனில் அக்கறை கொள்ளவும் வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில், டிரம்ப் நிா்வாகம் வலுவான ஆதரவை அளித்து வருவது பாராட்டுக்குரியது" என்றாா் அவா்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பை மோடி சந்தித்துப் பேசவுள்ளாா். இந்தச் சூழலில், மோடி, ஜெய்சங்கா் ஆகியோரை பாம்பேயோ சந்தித்துப் பேசியுள்ளாா்.

மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்குவது, ஹெச் 1பி விசா விவகாரம், வா்த்தகம், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com